போலிஸ் அதிகாரி தன்னைத் தானே சுட்டுக்கொண்டு மாண்டார்

போலிஸ் அதிகாரி தன்னைத் தானே சுட்டுக்கொண்டு மாண்டார்

1 mins read

முழுநேர போலிஸ் அதிகாரி ஒருவர் நேற்று முன்தினம் இரவு தன்னைத் தானே சுட்டுக்கொண்டு மாண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈசூன் சென்ட்ரலில் உள்ள ஈசூன் நார்த் அக்கம்பக்க போலிஸ் மையத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது. சார்ஜண்ட் பதவிநிலை வகித்த 28 வயதான அந்த ஆடவர், தனது சேவைத் துப்பாக்கியால் தனது தலையில் சுட்டுக்கொண்டார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கு அவர் ஈசூன் நார்த் அக்கம்பக்க போலிஸ் மையத்துத்து வந்து சேர்ந்தார். பின்னர் துப்பாக்கிக் கிடங்கில் தனது சேவைத் துப்பாக்கியைப் பெற்றுக்கொண்டார்.

அதே போலிஸ் மையத்தின் ஓய்வெடுக்கும் பகுதியில் இரவு 9.30 மணியளவில் அவர் தலையில் துப்பாக்கிச்சூட்டு காயத்துடன் தனியாகக் காணப்பட்டார் என்று தெரிவிக்கப் பட்டது. அப்போது அவரது சேவைத் துப்பாக்கி அவருக்கு அருகில் கிடந்தது. சுயநினைவிழந்த நிலையில் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அந்த அதிகாரி இரவு 10.26 மணிக்கு உயிரிழந்தார்.

இயற்கைக்கு மாறான மரணம் என்று இதை வகைப் படுத்தி போலிஸ் படையின் குற்றவியல் புனலாய்வுப் பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த மரணத்தில் எவ்வித சூதும் இருப்பதாக சந்தேகிக்கப்படவில்லை என்று தெரிவித்த போலிஸ், அதிகாரியின் குடும்பத்துக்குத் தேவை யான அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகவும் கூறியது.