'மொலோடோவ்' பெட்ரோல் குண்டு வீசிய இரு சகோதரர்களுக்குச் சிறை

'மொலோடோவ்' பெட்ரோல் குண்டு வீசிய இரு சகோதரர்களுக்குச் சிறை

2 mins read

செயின்ட் ஜேம்ஸ் பவர் ஸ்டேஷன் கேளிக்கை விடுதியில் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி நடந்த சச்சரவுக்குப் பிறகு அங்குள்ள மதுக்கூடத்திலிருந்து

29 வயது பிரயன் ஹோ சாங் ரோங்கை பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றினர்.

அவர் பின்னர் தன் 26 வயது தம்பி செஃபாஸ் ஹோ ஜின் ஆன்னுடன் திரும்பி, இருவரும் 'மொலோடோவ்' பெட்ரோல் குண்டுகளை அந்தக் கேளிக்கை விடுதியில் உள்ள 'கிளப் ஹாலிவூட்' மதுக்கூடத்தை நோக்கி வீசினர்.

இந்தக் குற்றத்தைப் புரிந்ததற்காக பிரயனுக்கு இரண்டு ஆண்டுகள் நான்கு மாதங்கள் சிறையும் செஃபாசுக்கு இரண்டு ஆண்டுகள் ஒன்பது மாதங்கள் சிறையும் தண்ட னையாக நேற்று விதிக்கப்பட்டது.

சகோதர்கள் இருவரும் மேலும் மூன்று நண்பர்களுடன் சேர்ந்து அந்தத் தாக்குதலை நடத்தினர் என்றும் அவர்கள் இருவரும் முன்னதாக குற்றத்தை ஒப்புக்கொண்டனர் என்றும் தெரிகிறது. சம்பவம் நடந்தபோது, சீஃபாஸ் கஞ்சா போதைப் பொருள் உட்கொண்டிருந்ததையும் அந்த போதைப் பொருளை வைத்திருந்ததையும் ஒப்புக்கொண்டார்.

அவர்களின் நண்பர்களில் இருவரான 29 வயது டோ வெய் யிக்கு 20 மாதச் சிறையும் போதைப் பொருள் குற்றங்கள் புரிந்திருந்த 28 வயது டெரில் டே கை லோங் குக்கு ஐந்தரை ஆண்டு சிறையும் தண்டனையாக கடந்த மார்ச் மாதம் விதிக்கப்பட்டுவிட்டது. மூன்றாவது நண்பரான யூஜின் லிம் ஹுவாங் ஷெங் 2017ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி மரணமடைந்தார்.

பிரயனுக்கு $15,000 பிணையும் செஃபாசுக்கு $20,000 பிணையும் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் தண்டனை காலத்தைத் தொடங்க இம்மாதம் 21ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலையாவார்கள்.