இரண்டு வயது குழந்தையைக் கொன்ற சந்தேகத்தின்பேரில் தந்தை கைது

செங்காங்கில் இரண்டு வயது குழந்தையைக் கொலை செய்த சந்தேகத்தின் பேரில் குழந்தையின் 34 வயது தந்தை கைது செய்யப்பட்டுள்ளார் என்று போலிசார் நேற்று வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10.24 மணிக்கு ரிவர்வேல் கிரசென்ட்டின் புளோக் 163பி-யிலிருந்து உதவிக்கோரி போலிசாருக்கு அழைப்பு வந்தது. 

இரண்டு வயது குழந்தை வீட்டின் படுக்கை அறையில் அசைவின்றி கிடந்ததை போலிசார் கண்டனர். 

அதே அறையில் 34 வயது ஆடவர் காயங்களுடன் கிடந்தார். 

ஆடவரும் குழந்தையும் செங்காங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 

பின்னிரவு 12.28 மணிக்குக் குழந்தை இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. 

அந்தச் சம்பவம் கொலை என வகைப்படுத்தப்பட்டு ஆடவர் கைது செய்யப்பட்டார். 

இன்று நீதிமன்றத்தில் அந்த ஆடவர் முன்னிலையாவார்.