இரண்டு வயது மகளைக் கொன்றதாக தந்தை மீது குற்றச்சாட்டு

செங்காங்கில் உள்ள வீட்டில் தந்தையர் தினத்தன்று இரண்டு வயது மகளைக் கொன்றதாக 35 வயது தந்தை ஜான்பாய் ஜான் டியோ மீது நேற்று குற்றம்சாட்டப் பட்டது.

சென்ற ஞாயிற்றுக்கிழமை மாலை ரிவர்வேல் கிரசெண்ட் புளோக் 163பி 11வது மாடியில் உள்ள வீட்டில் தனது இரண்டு வயது மகள் ஆஷ்லே கிளாரா டியோவை கொலை செய்ததாக மருத்துவமனையில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

ஞாயிறு இரவு 10.30 மணி யளவில் தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை யினர், படுக்கை அறையில் அசை வற்றுக் கிடந்த சிறுமியையும் காயத்துடன் இருந்த சிறுமியின் தந்தை டியோவையும் மீட்டு செங் காங் பொது மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் இரண்டு வயது சிறுமி நள்ளிரவுக்குப்பின் இறந்துவிட்டார்.

திரு டியோ மணவிலக்குப் பெற்றவர் என்று சீன நாளிதழ் ‌ஷின் மின் டெய்லி தெரிவித்தது.

கடந்த மார்ச் மாதம்தான் இரண்டு வயது மகளை தனது பொறுப்பில் வளர்க்க தாயார் சியோக் முறைப்படி அனுமதி பெற்றிருந்தார். இதையடுத்து சியோக் தனது மகளுடன் தனி வீட்டில் குடியேறினார். 

ஞாயிற்றுக் கிழமைகளில் மகளைப் பார்க்கும் உரிமை தந்தைக்கு வழங்கப்பட்டிருந்தது.

சம்பவ நாளான ஞாயிறு  மாலை மகளை தாயிடம் டியோ ஒப்படைக்க வேண்டும். ஆனால் ஒரு தகவலும் இல்லாததால் சியோக்கும் அவரது குடும்பத் தினரும் காவல்துறையிடம் புகார் செய்தனர்.  

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த அண் டை வீட்டுக்காரர் ஒருவர், சம்பவத் தன்று பெரிய சத்தமோ கூச்சலோ எழவில்லை என்று கூறினார்.