ஹாங்காங்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற இவ்வாண்டுக் கான ஆசிய விமானச் சரக்குப் போக்குவரத்து, தளவாடங் கள், தொடர் விநியோக விருதுகள் போட்டியில் சிங்கப்பூர் துறைமுகம் 31வது முறையாக "ஆசியாவின் தலைசிறந்த துறைமுகம்' விருதை வென்றது.
மேலும் சிங்கப்பூர் "தலைசிறந்த பசுமைத் துறைமுகம்' விருதையும் பெற்றது.
விமானச் சரக்குப் போக்குவரத்து, தளவாடங்கள் போன்ற தகவல்களைப் பிரசுரிக்கும் 'ஏஷியா கார்கோ நியூஸ்' ஏற் பாடு செய்து வரும் இந்த வருடாந்திர விருது விழாவில், பங்கேற்கும் அமைப்புகளின் சேவைத்தரம், தலைமைத்துவம், புத்தாக்கம், வாடிக்கையாளர் உறவு நிர்வாகம், நம்பகத் தன்மை ஆகியவை போட்டியின்போது கருத்தில் கொள்ளப் படும். அந்தச் சஞ்சிகையின் வாசகர்கள், பங்கேற்கும் அமைப்புகளிலிருந்து வெற்றியாளர்களை வாக்குகள் மூலம் தேர்வு செய்வார்கள்.
"தொழில்துறையினர் எங்களுக்கு அளித்து வரும் வலுவான ஆதரவுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி. இந்தத் தொடர் வெற்றி எங்களுக்கு மேலும் ஊக்கமளித்துள்ளது. நாங்கள் தொடர்ந்து எங்கள் பங்காளிகளுடன் பணியாற்றி, அனைத்துலக கடல்துறை மையமாக விளங்கும் சிங்கப்பூர் துறைமுகத்தின் நிலைப்பாட்டை வலுப்படுத்துவோம்," என்று சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையத்தின் தலைமை நிர்வாகி திருவாட்டி குவா லே ஹூன் கூறினார்.

