கடற்பாலத்தில் நடைபாதை கட்ட ஜோகூர் திட்டம்

ஜோகூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் பயணம் செய்வோருக்காகக் கடற்பாலத்தில் 1.2 கிலோமீட்டர் நீள நடைபாதையைக் கட்ட ஜோகூர் திட்டமிடுகிறது. 

கடற்பாலத்தில் நடந்து செல்லும் பலரும் தங்கள் உயிரைப் பணையம் வைப்பதாக ஜோகூர் மாநில அரசாங்கம் கண்டறிந்ததாகப் பொதுப் பணி, உள்கட்டமைப்பு, போக்குவரத்துக் குழுத் தலைவர் முகம்மது சொலிஹான் பத்ரி கூறினார். 

உச்ச நேரங்களில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க விரும்பி பலரும் கடற்பாலத்தில் நடந்து செல்வதாக அவர் தெரிவித்தார். இவர்களின் பாதுகாப்புக்காக நடைபாதை தேவைப்படுகிறது. 

நடைபாதை அமைப்பதற்கு 15 மில்லியன் ரிங்கிட் (4.91 மில்லியன் வெள்ளி) செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடற்பாலத்தின் இரு திசைகளிலும் அமைந்துள்ள மோட்டார்சைக்கிள் தடங்களில் கூரையுடன் கூடிய நடைபாதை அமைக்கப்படும். 

கடற்பாலத்தின் வழியாகச் சுமார் 215,000 பேர் சிங்கப்பூருக்குச் செல்வதாகவும், அவர்களில் 60 விழுக்காட்டினர் பாதசாரிகள் என்றும் திரு சொலிஹான் சென்ற ஆண்டு தெரிவித்தார். 

“மாநில அரசாங்கத்தின் பரிசீலனைக்காக ஆலோசகர்கள் விரிவான பரிந்துரையைத் தயாரித்து வருகின்றனர். அந்தப் பரிந்துரை இரண்டு முதல் மூன்று வாரங்களில் தயாராகிவிடும்,” என்றார் அவர்.