மருத்துவச் சோதனைக்காக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் சிங்கப்பூர் முன்னணி வகிக்கிறது. இருப்பினும் சீனா, சவூதி அரேபியா ஆகிய நாடுகளைக் காட்டிலும் குறைவான அளவே இங்கு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
டச்சு நாட்டின் தொழில்நுட்ப நிறுவனமான 'ராயல் பிலிஃப்ஸ்' இது குறித்து 15 நாடுகளில் கருத்தாய்வு மேற்கொண்டது.
சுகாதாரத் துறையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் நாடுகளின் வரிசையில் சிங்கப்பூர் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. சிங்கப்பூரில் துல்லியமான மருத்துவ சோதனை முடிவுகளை அறிவதற்கு இதுபோன்ற தொழில்நுட்பம் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இந்தக் கருத்தாய்வின் முடிவில், இந்த நாடுகள் சராசரி அளவாக 21% செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.
சிங்கப்பூர் இந்த சராசரி அளவைக் காட்டிலும் 7 விழுக்காடு அதிகம் பெற்று 28 விழுக்காடு பெற்றுள்ளது. சவூதி அரேபியா 34 விழுக்காடும் சீனா 45 விழுக்காடும் பெற்று முன்னிலை வகிக்கின்றன. அமெரிக்கா 10 விழுக்காடும் ஆஸ்திரேலியாவும் நெதர்லாந்தும் தலா 8 விழுக்காடும் பெற்றுள்ளன.
ஊழியர்கள் செயல்பாடு, நோயாளிகள் மருத்துவர்களைச் சந்திப்பதற்கான முன்பதிவு போன்ற நிர்வாகத் துறையைச் சேர்ந்த பணிகளுக்கும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுத்துவது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
நவீனத் தொழில்நுட்பத்தால் மருத்துவத் துறையில் ஏற்படும் மாற்றங்களால் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறையைச் சேர்ந்த திறனாளர்கள் 20 விழுக்காட்டினர் அச்சம் தெரிவித்ததாகவும் அந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்தது.

