தேசிய சேவை ஆற்றத் தவறிய திருமாலுக்குச் சிறை

தேசிய சேவை ஆற்றத் தவறிய திருமாலுக்குச் சிறை

2 mins read
56097d03-8428-47d7-b1f1-7174348d0845
திருமால் பவித்ரன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

உரிய அனுமதியின்றி தேசிய சேவை சட்டத்திற்குப் புறம்பாக சிங்கப்பூரைவிட்டு வெளியேறிய 25 வயது இந்திய குடிமகன் திருமால் பவித்ரனுக்கு 10 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருமால் தனக்கு எதிரான நான்கு குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்தியாவில் பிறந்த திருமால், 1997ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 தேதி சிங்கப்பூர் நிரந்தரவாசத்தைப் பெற்றார். சிங்கப்பூரிலேயே அவர் தொடக்கப்பள்ளியை முடித்து உயர்நிலைப் பள்ளி படித்துக்கொண்டிருந்தார். ஆனால் 2009ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி அவர் தமது உயர்நிலைக்கல்வியைத் தொடர இந்தியாவுக்குத் திரும்பினார். அதற்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில், தேசிய சேவைக்கு விண்ணப்பிக்கக் கூறி அவருக்கு அறிவிப்புக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி விண்ணப்பம் செய்யத் திருமால் தவறினார். செப்டம்பரில் அவருக்கு மருத்துவச் சோதனை தொடர்பான மற்றோர் உத்தரவுக் கடிதம் அனுப்பப்பட்டது. அந்தக் கடிதம் அனுப்பப்பட்ட தேதிக்கு 23 நாட்களுக்குப் பிறகு அவர் சிங்கப்பூருக்கு வந்திருந்தபோதும் அவர் கடிதத்தின்படி நடந்துகொள்ளவில்லை.

2012ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி திருமால் இறுதியாக மருத்துவச் சோதனைக்கு முன்னிலையானார். அவர் தேசிய சேவை செய்யத் தகுதியானவர் என்று சோதனையில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் பின்னர், பட்டப்படிப்பை முடிப்பதற்காகத் தமது தேசிய சேவையை ஒத்திவைக்க அவர் தற்காப்பு அமைச்சின் மத்திய ஆள்பலத் தளத்திடம் (Central Manpower Base) கேட்டிருந்தார். அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டபோதும் அதனை மீறி இந்தியாவுக்குச் சென்றார். பட்டப்படிப்பை முடித்த பிறகு, அவர் 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8ஆம் தேதியன்று சிங்கப்பூருக்குத் திரும்பி தானாகவே முன்வந்து தேசிய சேவையை நிறைவேற்றினார்.

தேசிய சேவை சட்டத்தின்படி, குற்றம் செய்பவர்களுக்கு எதிராகக் கடுமையான போக்கைக் கொண்டிருப்பதாகத் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

"சிங்கப்பூரின் ஆண் குடிமக்களும் நிரந்தவாசிகளும் தேசிய சேவையை ஆற்ற கடமைப்பட்டவர்கள். அதனைச் செய்யாமல் அனுமதியின்றி நாட்டைவிட்டு வெளியேறுபவர்களை விட்டுவைத்தால் அது தேசிய சேவையை முறையாக ஆற்றுவோருக்கு நியாயமற்றதாக இருக்கும்," என்று அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

திருமாலுக்கு மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் 10,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.