சிங்கப்பூரில் ஓடிய சைக்கிளில் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் செல்லும் மியன்மார் மாணவர்கள்

சிங்கப்பூரில் ஓடிய சைக்கிளில் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் செல்லும் மியன்மார் மாணவர்கள்

2 mins read
60976e3a-d92c-45a0-977e-d3b13e3e28fe
சிங்கப்பூரில் வாடகை சைக்கிள் நிறுவனங்கள் பயன்படுத்திய சைக்கிள்களை மியன்மார் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பயன்படுத்துகிறார்கள். படம்: ஏஎஃப்பி -

சிங்கப்பூர், மலேசியாவிலிருந்து அனுப்பப்பட்ட சைக்கிள்களில் மியன்மார் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளி செல்வதையும் வீடு திரும்புவதையும் இப்போது காண முடிகிறது. மியன்மார் தொழிலதிபரான மைக் தான் துன் வின் என்பவரின் 'லெஸ்வாக்' என்ற உதவித் திட்டத்தின் ஒரு பகுதியாக பயன்படுத்தப்பட்ட பழைய சைக்கிள்கள் புதுப்பிக்கப்பட்டு மியன்மார் ஏழை மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. அவற்றை முதலில் 200 மாணவர்கள் பெற்றுக்கொண்டு இருக்கிறார்கள். மைக் தான் துன் வின் சிங்கப்பூரில் வளர்ந்தவர், கல்வி கற்றவர். எட்டு ஆண்டுகளுக்கு முன் அவர் தன்னுடைய நாட்டுக்குத் திரும்பிச் சென்றார்.

"மியன்மாரில் பல மைல் தூரம் பல மணி நேரம் நடந்தே பிள்ளைகள் பள்ளிக்குச் செல்வதைப் பார்த்து இருக்கிறேன். அவர்களை நினைத்தால் எனக்கு பரிதாபமாக இருக்கிறது," என்று திரு மைக் கூறியதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மியன்மாரில் 55% சிறார்கள் ஏழ்மையில் வாழ்கிறார்கள். 17 வயது பதின்ம வயது சிறார்களில் பாதி பேர் கல்வி கற்பதே இல்லை. ஓபைக், ஓஃபோ, மொபைக் போன்ற வாடகை சைக்கிள் நிறுவனங்கள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிலிருந்து தங்கள் தொழிலைக் கைவிட்டு ஆயிரக்கணக்கான சைக்கிள்களை விட்டு விட்டு வெளியேறுவதை கேள்விப்பட்ட மைக், அந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டார். 10,000 பழைய சைக்கிள்களை வாங்கிய அவர், அவற்றை மியன்மாருக்குக் கொண்டு சென்றார். அவற்றைப் புதுப்பித்து அவர் இப்போது ஏழை மாணவர்களுக்கு வழங்கி வருகிறார். ஒவ்வொரு சைக்கிளுக்கும் அவருக்கு $35 செலவாகிறது. அதில் பாதியை மைக் ஏற்றுக் கொள்கிறார். பொறுப்பாதரவாளர் கள் மீதித்தொகையை ஏற்றுக் கொள்கிறார்கள்.

லெஸ்வாக் நிறுவனம் யங்கூன் மாணவர்களுக்கு முதலில் உதவுகிறது. பிறகு மியன்மாரின் பல பகுதிகளுக்கும் இந்தத் திட்டம் நீட்டிக்கப்படும். வீட்டிலிருந்து 2 கிலோமீட்டருக்கும் அதிகத் தொலைவு நடந்து பள்ளி செல்லும் 13 முதல் 16 வயதுள்ள சிறார் களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. ஐந்தாண்டு காலத்தில் 100,000 சைக்கிள்களை மாணவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பது மைக்கின் இலக்கு.

"இத்தகைய சைக்கிள்களுக்கு சிங்கப்பூரில் மதிப்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால் மியன்மார் போன்ற ஏழை நாடுகளில் இவற் றுக்கு மதிப்பு அதிகம்," என்று மைக் தெரிவித்தார்.