உணவு தயாரித்து வழங்கு இரு நிறுவனங்களில் உணவு உட்கொண்ட45 பேருக்கு உடல்நக் குறைவு ஏற்பட்டதால் தூய்மைத் தரக் குறியீடு 'சி'க்கு குறைக்கப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர், இவ்வாண்டு மார்ச்சில் இந்தச் சம்பவங்கள் நிகழ்ந்தன. நேஷனல் ஜூனியர் காலேஜின் (என்ஜெசி) தங்கும் விடுதியில் உள்ள மாணவர் உணவருந்தும் அறையில் 20க்கு அதிகாமானோர் உணவருந்தினர்.
'புரோ*3 இன்ஸ்டிடியூஷனல் கேட்டரிங்' நிறுவனத்திலிருந்து தருவிக்கப்பட்ட உணவை உண்ட அவர்களில் 21 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட வயிற்றுக்கோளாறு ஏற்பட்டதாக சிங்கப்பூர் உணவு அமைப்பின் இணையப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த நிறுவனம் கடந்த மார்ச் மாதம் 9ஆம் தேதி என்ஜெசியின் ஊழியர்களுக்கான காப்பிக்கடை, உணவு விடுதிகளுக்கு உணவு வழங்கும் சேவை ஆகியவற்றைச் செய்தது. 41 ஹில்கிரெஸ்ட் ரோட்டில் உள்ள என்ஜெசி தங்கும் விடுதியுடன்கூடிய பள்ளியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் தேதி சில்லி ஏபி கேட்டரிங் நிறுவனத்திலிருந்து தருவிக்கப்பட்ட உணவை உண்ட 24 பேருக்கு இதே போன்ற வயிற்றுக்கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. பெடோக் நார்த் ஸ்திரீட்டில் உள்ள ஷிமீ கிட்சனில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. நிறுவனங்களுக்கும் தனியார் நிகழ்ச்சிகளுக்கும் பெரும்பாலும் பெரெனாக்கான் வகை உணவுகளைத் தயாரித்து வழங்குகிறது சில்லி ஏபி கேட்டரிங் நிறுவனம்.
இவ்விரு சம்பவங்களையும் விசாரித்த சிங்கப்பூர் உணவு அமைப்பு, அந்த நிறுவனங்களின் உணவு தூய்மை தரக் குறியீட்டை 'சி'க்கு மாற்றுவதாக அறிவித்தது. ஆனால் அவ்விரு நிறுவனங்களின் இணையப்பக்கத்தில் அவற்றுக்கு முன்பு கொடுக்கப்பட்டிருந்த தரக் குறியீடான 'ஏ' காணப்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.'புரோ*3 இன்ஸ்டிடியூஷனல் கேட்டரிங்' நிறுவனத்தின் தரக்குறியீடு மாற்றம் கடந்த திங்கட்கிழமையிலிருந்து நடப்புக்கு வந்தது. அதற்கு அடுத்த நாளிலிருந்து புதிய குறியீட்டுடன் அது செயல்பட்டது. அடுத்த 12 மாதங்களுக்கு அந்த நிறுவன வளாகம் கண்காணிக்கப்படும் என சிங்கப்பூர் உணவு அமைப்பு கூறியது.

