சிங்கப்பூர் பூமலைக்குச் செல்லும் பார்வையாளர்கள் நாட்டின் நீண்ட பசுமைப் பாரம்பரியத்தையும் அறிந்துகொள்ளலாம். சர் ஸ்டாம்ஃபோர்ட் ராஃபிள்ஸ் 1819ஆம் ஆண்டு இங்கு வந்ததிலிருந்து தற்போது வரையிலான சிங்கப்பூரின் பசுமைப் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் 'சிங்கப்பூரின் பசுமைப் பயணம்: 200 இயர்ஸ் அண்ட் பியாண்ட்' எனும் கண்காட்சி சிட்டி டெவலப்மெண்ட்சின் (சிடிஎல்) கிரீன் கேலரியில் அமைக்கப்பட்டுளது.
சிங்கப்பூரின் இருநூற்றாண்டு நிறைவு, பூமலையின் 160வது ஆண்டு நிறைவு ஆகியவற்றை முன்னிட்டு சிடிஎல், தேசிய பூங்காக் கழகம் ஆகியவை சேர்ந்து ஏற்பாடு செய்த இந்தக் கண்காட்சி நேற்று தொடங்கிவைக்கப்பட்டது. இவ்வாண்டு நவம்பர் 10ஆம் தேதி வரை கண்காட்சி இடம்பெறும்.
மூன்று பகுதிகளாகக் கண்காட்சி பிரிக்கப்பட்டுள்ளது.
முதல் பகுதியில் 1819 முதல் 1964, இரண்டாவது பகுதியில் 1965 முதல் 2019 வரையிலான காலகட்டங்களில் சிங்கப்பூரின் பசுமை வரலாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மூன்றாவது பகுதியில் எதிர்கால பசுமை முயற்சிகள் விளக்கப்பட்டுள்ளன. அதில் பார்வையாளர்களும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்யலாம்.
நேற்று கண்காட்சியைத் திறந்துவைத்து உரையாற்றிய தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங், "பிற நாடுகளில் நகர்ப்புறமாக்கல் என்றால் பசுமை குறைந்துவிடும். ஆனால், சிங்கப்பூரில் அத்தகைய பரிமாற்றத்துக்கு சாத்தியமில்லை. நாட்டின் பசுமை வெளிகளைப் பாதுகாத்த வண்ணம் மேம்பாடுகளைச் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது," என்று கூறினார்.
இதன் தொடர்பில் அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட திரு வோங், சிடிஎல் போன்ற தனியார் நிறுவனங்களும் பசுமையான, நீடித்திருக்கக்கூடிய மேம்பாடுகளைச் செய்வதில் முக்கிய பங்காற்ற வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் சிங்கப்பூருக்கான டென்மார்க் தூதர் திருவாட்டி டோர்ட் பெச் விஸார்ட் உட்பட பல பேராளர்கள் கலந்துகொண்டனர். தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும் இந்தக் காட்சிக்கூடம் மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமைகளில் மூடப்படும்.

