இரு உணவு நிறுவனங்களின் தரக் குறியீடு 'சி'க்கு மாற்றம்

இரு உணவு நிறுவனங்களின் தரக் குறியீடு 'சி'க்கு மாற்றம்

2 mins read

உணவு தயாரித்து வழங்கும் இரு நிறுவனங்களில் உணவு உட்கொண்ட 45 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் தூய்மைத் தரக் குறியீடு 'சி'க்கு குறைக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு டிசம்பர், இவ்வாண்டு மார்ச்சில் இந்தச் சம்பவங்கள் நிகழ்ந்தன. நேஷனல் ஜூனியர் காலேஜின் (என்ஜெசி) தங்கும் விடுதி மாணவர் உணவருந்தும் அறையில் 20க்கு அதிகாமானோர் உணவருந்தினர்.

'புரோ*3 இன்ஸ்டிடியூஷனல் கேட்டரிங்' நிறுவனத்திலிருந்து தருவிக்கப்பட்ட உணவை உண்ட அவர்களில் 21 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட வயிற்றுக் கோளாறு ஏற்பட்டதாக சிங்கப்பூர் உணவு அமைப்பின் இணையப் பக்கத்தில் குறிப்­பிடப்பட்டிருந்தது. அந்த நிறுவனம் கடந்த மார்ச் மாதம் 9ஆம் தேதி 'என்ஜெசி'­யின் ஊழியர்களுக்கான காப்பிக்கடை, உணவு விடுதிகளுக்கு உணவு வழங்கும் சேவை ஆகிய­வற்றைச் செய்தது. 41 ஹில்கிரெஸ்ட் ரோட்டில் உள்ள 'என்ஜெசி' தங்கும் விடுதியுடன்கூடிய பள்ளியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் தேதி 'சில்லி ஏபி கேட்டரிங்' நிறுவனத்திலிருந்து தருவிக்கப்பட்ட உணவை உண்ட 24 பேருக்கு இதேபோன்ற வயிற்றுக் கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. பிடோக் நார்த் ஸ்திரீட்டில் உள்ள ‌ஷிமீ கிச்சனில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

நிறுவனங்களுக்கும் தனியார் நிகழ்ச்சிகளுக்கும் பெரும்பாலும் பெரெனாக்கான் வகை உணவைத் தயாரித்து வழங்குகிறது சில்லி ஏபி கேட்டரிங் நிறுவனம்.

விசராணைக்குப் பிறகு சிங்கப்பூர் உணவு அமைப்பு, அந்த நிறுவனங்களின் உணவு தூய்மை தரக் குறியீட்டை 'சி'க்கு மாற்றுவதாக அறிவித்தது. ஆனால் அவ்விரு நிறுவனங்களின் இணையப்பக்கத்தில் அவற்றுக்கு முன்பு கொடுக்கப்பட்டிருந்த தரக் குறியீடான 'ஏ' காணப்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.