ஆய்வு: 3ல் ஒருவர் சுயமாகக் காயப்படுத்திக் கொள்கிறார்

ஆய்வு: 3ல் ஒருவர் சுயமாகக் காயப்படுத்திக் கொள்கிறார்

2 mins read

சிங்கப்பூரில் மூன்றில் ஒரு இளையர் சுயமாகக் காயப்படுத்திக்கொள்வதாகவும் பத்தில் ஒருவர் அதனை அடிக்கடி செய்வதாகவும் அனைத்துலக ஆய்வு அமைப்பான 'யுகோவ்' கடந்த புதனன்று வெளியிட்ட ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. சிங்கப்பூரர்களில் மூன்றில் ஒருவர் உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணம் கொண்டிருந்ததையும் அந்த ஆய்வு கண்டறிந்துள்ளாது.

இந்தத் தகவல் பொதுமக்களுக்கு அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருந்தாலும், இந்தப் புள்ளிவிவரங்கள் நிபுணர்களை ஆச்சரியப்படுத்தவில்லை. இத்தகைய நிலைக்குத் தள்ளக்கூடிய மனநலப் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்புகொண்ட நிபுணர்கள் குறிப்பிட்டனர்.

ஆயினும் நொவீனா மருத்துவ நிலையத்தில் மனநல ஆலோசகராக இருக்கும் முனிதாச வின்ஸ்லோ, உயிரை மாய்த்துக்கொள்ள எண்ணுவோர் பற்றிய புள்ளிவிவரம் 'எச்சரிக்கை மணியடிப்பதாக' உள்ளது என்றார். சுயமாகக் காயப்படுத்திக்கொள்ளும் 18 முதல் 24 வயதுக்குட்பட்ட இளையர்கள் தங்களது உணர்வுபூர்வமான பிரச்சினைகளைப் பற்றி யாரிடமும் பேசுவதற்கோ அல்லது அதனைத் தீர்க்க முற்படுவதற்கோ பழகிக்கொள்வதில்லை என்றார்.

பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள இருக்கும் உதவிகள் பற்றிய விழிப்புணர்வு, பிரச்சினைகளைத் தீர்க்கும் முறை ஆகியன பற்றி தெளிவாகத் தெரியாமல் இருக்கும்பட்சத்தில் இளையர்கள் தங்களைக் காயப்படுத்திக்கொள்கின்றனர் என 'சமாரிட்டன்ஸ் ஆஃப் சிங்கப்பூர்' அமைப்பின் மூத்த உதவி இயக்குநர் வோங் லாய் சுன் கூறினார்.

இளையர்களின் உணர்வுகளைப் பாதிக்கக்கூடிய கல்வி, உறவுகள் தொடர்பான நெருக்கடி, சுரப்புகளில் ஏற்படும் மாற்றம் போன்றவையே இளையர்கள் தாமாகவே காயப்படுத்திக்கொள்வதற்கான முக்கிய காரணங்களாக இருப்பதாக அவர் கூறினார்.

இத்தகைய பிரச்சினை உள்ளவர்களுடன் மற்றவர்கள் நல்ல முறையில் தொடர்புகொள்வது அவசியம் என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். மற்றவர்களிடம் பிரச்சினைகளைப் பகிர்ந்துகொள்ளத் தயங்கும் இளையர்கள் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.