வாகன நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதம் கடுமையாக்கப்படும்

சட்டத்திற்குப் புறம்பான முறையில் வாகனங்களை நிறுத்துவோருக்கான அபராதங்கள் ஜூலை 1ஆம் தேதி முதல் மேலும் கடுமையாக்கப்படும். வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், நகர மறுசீரமைப்பு ஆணையம் ஆகியவை மேற்கொண்ட மறுஆய்வைத் தொடர்ந்து அபராதங்களை உயர்த்தும் முடிவு வெளிவந்துள்ளது.சட்டவிரோத வாகன நிறுத்தம் தொடர்பான குற்றங்கள், வாகன நிறுத்தச் சீட்டு மற்றும் மின்னிலக்க வாகன நிறுத்தம் தொடர்பான குற்றங்கள், ‘இபிஎஸ்’  வழியாகக் கட்டணம் செலுத்தத் தவறிய குற்றங்கள் ஆகியவற்றுக்கான அபராதங்கள் அதிகரிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகளுக்கு இணங்காமல் விவேகமின்றி வாகனத்தை நிறுத்துபவர்களுக்கு 35 வெள்ளி அபராதம் விதிக்கப்படும். முன்னைய அபராதத் தொகையைவிட இது 10 வெள்ளி அதிகம்.சட்டத்தை மீறி வாகனத்தை நிறுத்தும் வாகனமோட்டிகள், கனரக வாகனமோட்டிகள் ஆகியோருக்கான அபராதம் கூடுதலாக 20 வெள்ளி உயர்த்தப்படும்.  இதன்படி, வாகன ஓட்டுநர்கள் 70 வெள்ளியும் கனரக வாகன ஓட்டுநர்கள் 100 வெள்ளியும் கட்டவேண்டும்.

சட்டவிரோத வாகன நிறுத்தம் தொடர்பில் 2016ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை ஆண்டுக்குச் சராசரியாக 260,800  அறிவிப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டன.