$11 மில்லியனுக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ள மூன்று கடைவீடுகள்

லிட்டில் இந்தியாவில் அடுத்தடுத்துள்ள மூன்று கடைவீடுகள் $11 மில்லியனுக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ளன. இந்தக் கடைவீடுகள் மொத்தம் 3,870 சதுர அடி நிலப் பரப்பளவில் அமைந்துள்ளன. அவற்றின் தரை பரப்பளவு சுமார் 7,771 சதுர அடியாகும்.

இந்தக் கடைவீடுகளைச் சந்தைப்படுத்தும் முகமை நிறுவனமான 'குஷ்மேன் & வேக்ஃபீல்ட்' இந்த விவரங்களைத் தெரிவித்தது.
இந்தக் கடைவீடுகள் டல்ஹௌசி லேன், மெட்ராஸ் ஸ்த்ரீட் சந்திப்பில் அமைந்துள்ளன. இவை அமைந்துள்ள நிலப்பகுதியின் குத்தகைக் காலம் 99 ஆண்டுகள். குத்தகைக் காலம் 1993ஆம் ஆண்டு நவம்பரில் தொடங்கிய நிலையில், இன்னும் சுமார் 73 ஆண்டுகள் குத்தகையில் எஞ்சியுள்ளன.

எண் 27 டல்ஹௌசி லேனில் அமைந்துள்ள கடைவீடு இரு மாடிகளைக் கொண்டுள்ளது. எண் 29, 31ல் உள்ள மற்ற இரு கடைவீடுகளில் இரு மாடிகளுக்கு இடையே இடைமாடி உள்ளது. கடைவீடுகளின் விலை $11 மில்லியன் என்றால், தரை பரப்பளவு அடிப்படையில் ஒரு சதுர அடிக்கு $1,415ஆக மதிப்பிடப்படுகிறது.