கண்ணாடியிழை சேவைக்கு வாடிக்கையாளர்கள் மாற ஸ்டார்ஹப் நிறுவனம் காலக்கெடு நீட்டிப்பு

கண்ணாடியிழை சேவைக்கு வாடிக்கையாளர்கள் மாற ஸ்டார்ஹப் நிறுவனம் காலக்கெடு நீட்டிப்பு

1 mins read
9be4c005-274a-407f-bbd5-406af4de1e05
PHOTO: ST FILE -

தொலைத்தொடர்பு நிறுவனமான ஸ்டார்ஹப்பின் கம்பிவடச் சேவைகளைப் பெற்று வரும் வாடிக்கையாளர்கள் கண்ணாடிஇழை சேவைக்கு மாறுவதற்கான கால அவகாசம் மூன்று மாதங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 30ஆம் தேதியுடன் நிறுத்தப்படவிருந்த கம்பிவடச் சேவைகள், செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. ஆனால், கம்பிவடத்திலிருந்து கண்ணாடியிழை சேவைக்கு வாடிக்கையாளர்கள் மாறுவதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 31ஆம் தேதி.

சேவை மாறுவது குறித்து கடந்த சில நாட்களாக வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் அதிகரித்த நிலையில், அவர்களுக்குச் சேவைகளை மாற்றிவிடும் பணிகள் ஸ்டார்ஹப் நிறுவனத்திற்கு அடுக்கிக்கொண்டே போயின.

இதன் காரணமாக எஞ்சி உள்ள வாடிக்கையாளர்கள் சேவை மாறுவதற்கு கூடுதல் கால அவகாசத்தை வழங்க அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

இதுவரை எத்தனை விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன என்பது குறித்த விவரங்களை வெளியிட ஸ்டார்ஹப் மறுத்துவிட்டது. ஆனால், அதன் தொலைக்காட்சி சேவையைப் பெறும் 394,000 வாடிக்கையாளர்களில் பெரும்பகுதியினர் கண்ணாடியிழை சேவைக்கு மாறிவிட்டதாக அந்நிறுவனம் குறிப்பிட்டது.

கண்ணாடியிழை சேவைக்கு மாறும் வாடிக்கையாளர்கள் ஏற்கெனவே கம்பிவடச் சேவைக்கு செலுத்திய கட்டணத்தைத்தான் தொடர்ந்து செலுத்துவர்.

தற்போது சிங்கப்பூரில் கம்பிவடத் தொலைக்காட்சி சேவையை வழங்கும் ஒரே தொலைத்தொடர்பு நிறுவனம் ஸ்டார்ஹப்.