ஜூரோங் தொழிற்பேட்டை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்ட தீச்சம்பவத்தைத் தொடர்ந்து 'யூனியன் கேஸ் ஹோல்டிங்ஸ்' நிறுவனம் அதன் எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாக்கத்தைக் கண்காணித்து வருகிறது.
இந்தச் தீச்சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்தனர்.
ஜாலான் புரோவில் உள்ள 'சம்மிட் கேஸ் சிஸ்டம்ஸ்' தொழிற்பேட்டையிலிருந்து யூனியன் கேஸ் தனது எரிவாயு விநியோகத்தை 'செம்கேஸ் சப்ளை' தொழிற்பேட்டைக்கு மாற்றியுள்ளது.
தீச்சம்பவத்தில் ஏற்பட்ட உயிர் சேதம் குறித்து தான் வருந்துவதாகக் குறிப்பிட்ட யூனியன் கேஸ் நிறுவனம், உயிரிழந்த ஊழியரின் குடும்பத்திற்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டது.
வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிவாயுத் தோம்புகளை யூனியன் கேஸ் விநியோகம் செய்கிறது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை இதுவரை கையாண்டுள்ள எரிவாயுத் தோம்புகள் சம்பந்தப்பட்ட ஆகப் பெரிய தீச்சம்பவம் இது என்று அதன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

