சிங்கப்பூர் டெங்கி பிரச்சினை மோசமாவதைத் தடுக்க தங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் செய்து வருவதாக செம்பவாங் குழுத் தொகுதியும் தேசிய சுற்றுப்புற வாரியமும் தெரிவித்துள்ளன.
குறிப்பாக, உட்லண்ட்ஸ் அவென்யூ 6ல் டெங்கி தடுப்பு முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அப்பகுதியில் உள்ள இரு டெங்கி பரவல் இடங்களில் மட்டும் சிங்கப்பூரிலேயே ஆக அதிக எண்ணிக்கையாக மொத்தம் 360 பேருக்கு டெங்கித் தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்பவாங் குழுத் தொகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பரிசோதனை மேற்கொள்வது அத்தகைய முயற்சிகளில் ஒன்று என அக்குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கோ பூன் வான் நேற்று தெரிவித்தார்.
"புதிய சம்பவங்கள் ஏற்படும் விகிதம் குறைந்து வருகிறது. ஆனால் நமது முயற்சிகளில் மெத்தனமாக இருந்துவிடக்கூடாது. அடித்தள ஆர்வலர்களுடன் அருகிலுள்ள பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும் இந்த முயற்சியில் இறங்கியுள்ளனர்," என்றார் அவர்.
டெங்கி பரவலைத் தடுப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய முயற்சிகள் குறித்து குடியிருப்பாளர்கள் நன்கு அறிந்து வைத்திருப்பதாக திரு கோ குறிப்பிட்டார்.
"டெங்கி தொற்று குறித்து குடியிருப்பாளர்கள் கவலை தெரிவித்தாலும் கூடிய விரைவில் நிலைமை மேம்படும் என்று நம்பிக்கையுடன் உள்ளனர்," என்று சொன்ன அவர், அதே நம்பிக்கையைத் தாமும் வெளிப்படுத்துவதாகக் கூறினார்.
இவ்வாண்டு இதுவரை 5,500க்கும் மேற்பட்டோருக்கு டெங்கி தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களில் சுமார் 2,000 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்பட்டது. டெங்கி காய்ச்சலால் இதுவரை ஐவர் உயிரிழந்தனர்.
இவ்வாண்டுடன் ஒப்புநோக்க, கடந்த ஈராண்டுகளாக டெங்கி பாதிப்பு சற்று குறைவாக இருந்தது. 2013ஆம் ஆண்டிற்கு பிறகு இப்போது டெங்கி பரவல் ஆக மோசமாக உள்ளது. 2013ல் 22,000க்கும் அதிகமானோருக்கு டெங்கி தொற்று ஏற்பட்டிருந்தது.
இவ்வாண்டு கொசு இனப் பெருக்கத்திற்கு வழிவிட்ட ஏறத்தாழ 900 குடும்பங்களுக்கு தேசிய சுற்றுப்புற வாரியம் அபராதம் விதித்துள்ளது.

