ஜுவல் சாங்கி மின்படியில் சிறுவனின் கால் சிக்கியது

ஜுவல் சாங்கி மின்படியில் சிறுவனின் கால் சிக்கியது

1 mins read

ஜுவல் சாங்கி விமான நிலையக் கடைத்தொகுதியில் உள்ள மின்படி ஒன்றில் சிறுவன் ஒருவனின் கால் மாட்டிக்கொண்டது.

எண் 78 ஏர்போர்ட் பொலிவார்ட்டில் ஏற்பட்ட இச்சம்பவம் குறித்து நேற்று பிற்பகல் 3.20 மணியளவில் தனக்கு தகவல் அளிக்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

மீட்புச் சாதனங்களைப் பயன்படுத்தி அதிகாரிகள் அச்சிறுவனை மீட்டனர். அவசர மருத்துவ வாகனம் மூலம் அச்சிறுவன் கேகே மகளிர், சிறார் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டான்.

மின்படியின் ஓரப் பகுதியில் அந்தச் சிறுவனின் கால் உரசியபோது இச்சம்பவம் நிகழ்ந்தது என விசாரணையில் தெரிய வந்ததாக ஜுவல் சாங்கியின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். ஆனால், அச்சிறுவனின் வயது தெரிவிக்கப்படவில்லை. மின்படிகளில் ஏறி இறங்கும்போது, குறிப்பாக பிள்ளைகளை வைத்திருப்போர் கவனத்துடன் இருக்குமாறு அப்பேச்சாளர் கேட்டுக்கொண்டார்.

கடந்த மாதம் ஜுவல் சாங்கி கடைத்தொகுதியில் சிறுவன் ஒருவனின் செருப்பு மின்படியில் சிக்கிக்கொண்டதில் அவனது கால் விரல் காயமடைந்தது.

சம்பவம் நிகழ்ந்ததை அடுத்து ஜுவல் சாங்கியில் பாதிக்கப்பட்ட மின்படிகள் பழுதுபார்ப்புப் பணிகளுக்கு உட்படுத்தப்பட்டன.

படம்: சாவ் பாவ்