செந்தோசாவில் இரண்டாவது ராஃபிள்ஸ் ஹோட்டல்

இரண்டாவது ராஃபிள்ஸ் ஹோட்டல் வரும் 2022ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் திறக்கப்படவிருக்கிறது. தேசிய நினைவுச் சின்னமான முதலாவது ராஃபிள்ஸ் ஹோட்டல்  சிங்கப்பூரில் 1887ஆம் ஆண்டில் பீச் ரோட்டில் கட்டப்பட்டு 135 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது  அதன் இரண்டாவது ஹோட்டல் செந்தோசா தீவில் அமையவிருக்கிறது. ‘ராஃபிள்ஸ் செந்தோசா ரிசோர்ட் அண்ட் ஸ்பா சிங்கப்பூர்’ என்று அழைக்கப்படும் அந்த ஹோட்டல் பற்றிய விவரங்களை அக்கோர் ஹோட்டல் குழுமமும் சொத்து மேம்பாட்டாளர் ராயல் குழுமமும் நேற்று வெளியிட்டன. தனி நீச்சல் குளம் உள்ள 61 வில்லா மாளிகைகளைக் கொண்டுள்ள அந்த உத்தேச ஹோட்டல் 1,000,000 சதுர அடி பரப்பளவு நிலத்தில் அமைக்கப்படும். அந்நிலம் 17 காற்பந்துத் திடல்களுக்குச் சமமானது.

‘எஸ்ஓ சொஃபிடேல் சிங்கப் பூர்’ ஹோட்டல், ‘சொஃபிடேல் சிங்கப்பூர் செந்தோசா ரிசோர்ட் அண்ட் ஸ்பா’ ஹோட்டல் ஆகியவற்றின் உரிமையாளரான ராயல் குழுமம், புதிய ராஃபிள்ஸ் ரிசோர்ட் ஹோட்டலை, ‘சொஃபிடேல் சிங்கப்பூர் செந்தோசா ஹோட்டலுக்கு எதிர்புறத்தில் அமைக்கும். புதிய ஹோட்டல் ராஃபிள்ஸ் வர்த்தகச் சின்னத்தின் புதிய பிரதிபலிப்பாக இருக்கும் என்று ராயல் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் திரு பீட்டர் வைல்டிங் நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

“சிங்கப்பூர் தீவிலும் செந்தோ சாவிலும் உள்ள உல்லாச ஹோட்டல்கள் பற்றி ஆழமான ஆய்வுக்குப் பிறகு, தனிமையும் பாதுகாப்பும் கொண்ட தனித்துவமான உல்லாச வில்லா மாளிகையில் தங்க சுற்றுப் பயணிகள் பலர் விரும்புகிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டோம். சிங்கப்பூரில் முழுவதுமாக வில்லா மாளிகைகளைக் கொண்ட ஒரே ஹோட்டல் இதுவாகத்தால் இருக்கும்,” என்றும் திரு வைல்டிங் கூறினார். இந்தப் புதிய ஹோட்டலில் மதுக்கூடம், உணவகங்கள், உடலுறுதி நிலையம், கொண்டாட்டங் கள் அறை, இரண்டு கூட்ட அறை கள் ஆகியவை இருக்கும்.

இதற்கிடையே, 1989ஆம் ஆண்டுக்குப் பிறகு விரிவான மறுசீரமைப்பு, புதுப்பிப்புப் பணிகளுக்காக 2017ஆம் ஆண்டு டிசம்பரில் மூடப்பட்ட ராஃபிள்ஸ் ஹோட்டல், வரும் ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் திறக்கப்படும். அதில் புதிய உல்லாச அறைகள், மேம்படுத்தப்பட்ட கொண்டாட்ட அரங்கம், புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட உணவங்கள், மதுக்கூடங்கள் ஆகியவை இருக்கும் என்றும் நேற்றைய செய்தியாளர் கூட்டத்தில் கூறப்பட்டது.