ஞாபக மறதி நோயை விரைவாக, குறைந்த செலவில் கண்டறியும் புதிய ரத்தப் பரிசோதனை முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் அனைவருக்கும் கிடைக்கக்கூடும்.
முதுமையில் ஏற்படக்கூடிய கடுமையான மறதி நோயை ஆரம்பக் கட்டத்திலேயே துல்லியமாகக் கண்டறியும் இந்த முறையை சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். உலகிலேயே முதலாவதாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பரிசோதனை முறை, மருத்துவ ரீதியாக நோய்க்கான அறிகுறிகள் தெரிவதற்கு முன்னரே நோயைக் கண்டறிந்துவிடும். சிறு துளி ரத்தத்தை மட்டுமே கொண்டு இப்புதிய சோதனை முறை நோயை ஒரு மணி நேரத்திற்குள் கண்டறிந்துவிடும் என்று பல்கலைக்கழகம் கூறியது.

