50, 100 வெள்ளி நோட்டுகள் போலியா என்பதைக் கண்டறிய வழிகள்

50, 100 வெள்ளி நோட்டுகள் போலியா என்பதைக் கண்டறிய வழிகள்

1 mins read

போலி நோட்டுகள் குறித்து மார்ச் மாதத்திற்கும் மே மாதத்திற்கும் இடையில் புகார்களைப் பெற்ற போலிசார், இதன் தொடர்பில் பொதுமக்களுக்கான ஆலோசனையை வெளியிட்டுள்ளனர். 50 வெள்ளி, 100 வெள்ளி போலி நோட்டுகளைக் கண்டுபிடிப்பதற்கான நான்கு உதவிக்குறிப்புகளையும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒன்று, அச்சிடப்பட்ட அல்லது நகலெடுக்கப்பட்ட போலி நோட்டுகளில் மேலிருந்து கீழ் செல்லும் நூலிழை கோடு இருக்காது. நோட்டின் மதிப்பைக் காட்டும் எழுத்துகளும் நான்கு அதிகாரத்துவ மொழிகளில் சிங்கப்பூர் என்ற பெயரும் அந்த நூலிழையில் இடம்பெற்றிருக்கும்.

இரண்டாவதாக நோட்டின் நீரோட்டக் குறி (watermark). ஒளி வெளிச்சத்தில் காணும்போது போலி நோட்டுகளில் நீரோட்டக் குறி தென்படாது. உண்மையான நோட்டின் நீரோட்டக் குறியில் பல்வேறு நிறக்கூறுகளுடன் திரு யூசோஃப் இஷாக்கின் படம் காணப்படும். அடுத்ததாக போலியான நோட்டுகளில் காணப்படும் 'கினகிராம்' எனப்படும் பளபளப்பான எண்கோண வடிவம், உண்மை நோட்டுக்கும் போலி நோட்டுக்கும் இடையே வேறுபட்டிருக்கும். உண்மையான நோட்டில் அந்த வடிவத்தை மற்றொரு கோணத்திலிருந்து பார்க்கும்போது, அதற்குள் இருக்கும் ஒரு படம் சற்று அசையவேண்டும்.

ஆனால் போலி நோட்டில் அந்தப் படம் அவ்வாறு அசையாது. இறுதியாகப் புடைத்திருத்தல் (embossed). உண்மையான நோட்டுகள் சிறப்பு மையுடன் கையால் பொறிக்கப்பட்டிருப்பதால் ஒருவித புடைத்திருக்கும் தன்மையைத் தொட்டுணரமுடியும். போலி நோட்டுகளை விரல்களால் உரசும்போது அதேபோல இல்லாமல் மிருதுவாக இருக்கும். தங்களிடம் யாரேனும் போலி நோட்டு கொடுத்ததாகச் சந்தேகித்தால் உடனே போலிசாரை அணுகுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.