மற்றொருவரின் அடையாள அட்டையைப் பயன்படுத்தியதற்காகப் பிடிபட்ட ஆடவர்

செய்தித்தாள் விநியோகர் ஒருவரைத் தாக்கிய பிறகு அதிகாரிகளின் பிடியிலிருந்து பதின்மூன்று ஆண்டுகளாகத் தப்பிவந்த ஆடவர், இறுதியில் தனக்கு அறிமுகமில்லாத ஒருவரின் அடையாள அட்டையைப் பயன்படுத்தியபோது சிக்கினார். 58 வயது ஜேம்ஸ் நல்லராஜன் நாயுடு ஆதிசேஷனுக்கு ஒன்றரை ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அடையாள அட்டையின் உரிமையாளர் திரு சந்திரன் சின்னத்தம்பி, செங்காங் பொது மருத்துவமனையில் நாயுடுவைத் தற்செயலாகப் பார்த்தபோது, நாயுடு தமது அடையாள அட்டையைப் பயன்படுத்தி வருவதைக் கண்டுபிடித்தார். இது பற்றி திரு சந்திரன் உடனே மருத்துவமனை ஊழியரிடம் தெரிவித்தார். மருத்துவமனை ஊழியர் உடனே போலிசாரை அழைத்தார்.

கால் முறிவுக்காக மருத்துவமனைக்குச் சென்றிருந்தார் நாயுடு. அவர் திரு சந்திரனின் அடையாள அட்டையைப் பயன்படுத்தியதால், திரு சந்திரனின் பெயரில் நாயுடுவின் மருத்துவப் பரிசோதனைக்கான முன்பதிவு  செய்யப்பட்டது. அந்த முன்பதிவை நினைவுபடுத்தும் குறுந்தகவல் திரு சந்திரனின் கைத்தொலைபேசிக்கு அனுப்பப்பட்டபோது தமது அடையாள அட்டையை யாரோ பயன்படுத்தியதாகத் திரு சந்திரன் தெரிந்துகொண்டார்.