பீஷான் எம்ஆர்டி ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள டாக்சி நிறுத்தத்தில் ஈரடுக்கு எஸ்பிஎஸ் பேருந்து மோதி அதனைச் சேதப்படுத்தியது. நேற்று காலை 8.50 மணிக்கு நடந்த அந்தச் சம்பவத்தின்போது பேருந்தில் 91 பயணிகள் இருந்ததாக எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' பத்திரிகையிடம் தெரிவித்தது.
"பீஷான் ரோட்டிலுள்ள எண் '13ஏ' பயணிகள் பேருந்து ஒன்று டாக்சி நிறுத்தத்தில் மோதியதில் அதன் கூரை இடிந்தது. நல்ல வேளையாக எவரும் காயமடையவில்லை. இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பயணிகள், சாலை பயன்பாட்டாளர்கள் ஆகியோரிடம் நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம்," என்று எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தின் பேச்சாளர் 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழிடம் தெரிவித்தார்.
பேருந்துக்குப் பின்னால் இருந்த வாகனத்தின் கேமராவில் இந்தச் சம்பவம் பதிவானது. அந்த வாகனத்தின் ஓட்டுநர் கெல்வின் அந்தக் காணொளியை ஸ்டாம்ப் செய்தித்தளத்திற்கு அனுப்பினார்.

