சிங்கப்பூர் அனைத்துலக மின்னிலக்கப் பொருளியலில் சிறப்பதற்காக அதிநவீன 5ஜி தொழில்நுட்பப் பயன்பாட்டுக்கு நாற்பது மில்லியன் வெள்ளி முதலீடு செய்யப்படவுள்ளது.
அறிவார்ந்த துறைமுக நிர்வாகத்திற்கு 5ஜி முக்கியமாகப் பயன்படுத்தப்படலாம். ஓட்டுநரில்லாப் பாரந்தூக்கிகள் வழியாகக் கண்காணிப்பாளர் ஒருவர் கப்பல்களில் சரக்குப் பெட்டிகளை ஏற்றவும் இறக்கவும் 5ஜி வழிசெய்கிறது. இத்தகைய தொழில்நுட்பங்களுக்கான சோதனைகளை நடத்துவதற்காகத் துறைமுக நிறுவனம் 'பிஎஸ்ஏ இன்டர்னேஷனல்' சிங்டெல்லையும் எம்1 நிறுவனத்தையும் நியமித்துள்ளது. ஒதுக்கப்பட்டுள்ள 40 மில்லியன் வெள்ளி செலவுத்தொகையிலிருந்து மானியம் பெறும் முதல் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இவை.
"புத்தாக்கமிக்க இத்தகைய பயன்பாடுகளுக்கு முன்னோடிகளாக இருக்க நாங்கள் விரும்புகிறோம்," என்று தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் வியாழக்கிழமை (27 ஜூன்) அறிவித்தார்.
எதிர்காலத்தின் முக்கிய மின்னிலக்கக் கட்டமைப்பாக 5ஜியை வர்ணித்த திரு ஈஸ்வரன், இந்தத் தொழில்நுட்பம் ஏற்றுமதி சார்ந்த ஆறு துறைகளில் பெரும் மதிப்பை உண்டாக்கும் என தெரிவித்தார். கடல் துறை செயல்பாடு, நகரப் போக்குவரத்து, அறிவார்ந்த நிலச்சொத்து நிர்வாகம், அறிவார்ந்த உற்பத்தி, அரசாங்கம், பயனாளர் செயலிகள் ஆகியவை அந்த ஆறு துறைகள் என அவர் கூறினார்.
ஐந்தாவது முறையாக நடைபெறும் 'இனோவேஸ்ட் அன்ட்பவுண்ட்' நிகழ்ச்சியின் தொடக்கத்தில் உரையாற்றிய திரு ஈஸ்வரன், 5ஜி சோதனைகள் இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டிலேயே தொடங்கும் என தெரிவித்தார்.

