சொத்துச் சந்தைக்கான தணிப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் தற்போதைக்கு தளர்த்தாது என்று சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்திருக்கிறது. வியாழக்கிழமை நடைபெற்ற ஆணையத்தின் வருடாந்திர அறிக்கையின் வெளியீட்டின்போது தணிப்பு நடவடிக்கைகள் தளர்த்தப்படுமா என ஆணையத்தின் தலைவர் ரவி மேனனிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த திரு மேனன், இந்த நடவடிக்கைகள் ஓராண்டுக்கு முன்னர்தான் அமல்படுத்தப்பட்டன என்றும் அவை தாக்கத்தை ஏற்படுத்த காலம் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார். ஆயினும், சொத்துகளின் விலையேற்றம் குறைந்திருப்பதாகவும் தற்போது மிதமாக உள்ள வாங்கல் விற்றல் நடவடிக்கைகளால் சந்தை சமநிலையுடன் இயங்குவதாகவும் அவர் கூறினார்.
சொத்துச் சந்தையின் ஆரோக்கியத்தையும் நிலைத்தன்மையையும் உறுதி செய்வதற்காக அரசாங்கம் அதனை அணுக்கமாகக் கண்காணிக்கும் என்று திரு மேனன் தெரிவித்தார். சொத்துச் சந்தையைத் தவிர, ஃபேஸ்புக் சமூக ஊடக நிறுவனத்தின் லிப்ரா எனப்படும் மின்னிலக்க நாணயத்தைக் கூர்ந்து கண்காணிப்பதாக ஆணையம் கூறியது. இது வியப்புக்குரிய உருவாக்கம் என்று வர்ணித்த திரு மேனன், ஃபேஸ்புக்குடனும் 'லிப்ரா' சங்கத்துடனும் கலந்து ஆலோசிப்பதாகக் கூறினார்.