மின்னிலக்கமயமாகும் சொத்துப் பரிவர்த்தனைகள்

மின்னிலக்கமயமாகும் சொத்துப் பரிவர்த்தனைகள்

2 mins read
420cef6b-2da4-4d4f-a946-4ccab94837b6
-

மின்னிலக்கப் பொருளியல் சட்டத்தில் அரசாங்கம் பல்வேறு மாற்றங்களைச் செய்து வரும் நிலையில், இணையத்தில் சொத்துகள் வாங்குவதை, விற்பதை சிங்கப்பூரர்களும் வர்த்தகங்களும் எதிர்பார்க்கலாம். ஒருவருக்கு நிரந்தர அதிகாரம் வழங்குவதற்கான பத்திரங்களையும் சிங்கப்பூரர்கள் இணையத்தில் விண்ணப்பிக்கலாம். அதே சமயத்தில், எல்லைத் தாண்டிய வர்த்தக ஆவணப்படுத்தும் முறையும் மின்னிலக்கமயமாக்கப்படும்.

சிங்கப்பூர் அதன் மின்னிலக்கப் பொருளியலை மேம்படுத்திப் புத்தாக்கத்தை ஊக்குவிக்க அரசாங்கம் சட்டத்தில் மாற்றங்களைச் செய்து வரும் வேளையில், மறுஆய்வு செய்யப்படும் மின்னிலக்கப் பரிவர்த்தனைச் சட்டத்தில் இந்த அம்சங்கள் இடம்பெறுகின்றன. வருடாந்திர தொழில்நுட்ப மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் நேற்று உரையாற்றிய தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் இந்த விவரங்களைத் தெரிவித்தார். ஐந்தாவது ஆண்டாக நடைபெறும் 'இன்னொவெஸ்ட் அன்பவுன்ட்' எனப்படும் அந்த மாநாட்டில் அவர் கலந்துகொண்டார்.

"பரிவர்த்தனைகள் மின்னிலக்கமயமாக்கப்படுவதால் வர்த்தகங்களும் பயனீட்டாளர்களும் நிம்மதி தரும் சூழலில் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்," என்றார் அவர். மின்னிலக்கப் பரிவர்த்தனைச் சட்டத்தில் இடம்பெறும் இந்த மாற்றங்களின் மூலம் புதிய தொழில்நுட்பங்கள் உருவெடுக்கும் சூழலில் சட்டத்தை மாற்றியமைக்கும் முதல் சில நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று.

குடியிருப்புச் சொத்து ஆவணங்களில் 70 விழுக்காட்டிற்கு இன்னும் தாள் வேலை தேவைப்படுவதைத் திரு ஈஸ்வரன் சுட்டினார். இத்தகைய பரிவர்த்தனைகளை மின்னிலக்கமயமாக்குவதன் மூலம் சொத்து வாங்குபவர்களும் விற்பவர்களும் விரைவான பரிவர்த்தனை நடைமுறையை எதிர்பார்க்கலாம்.

அனைத்துலக மின்னியல் வர்த்தக கட்டமைப்பின் நடைமுறைக்குரிய மின்னிலக்கப் பதிவேடுகளுக்கான சட்டமியற்றுவது குறித்தும் அரசாங்கம் திட்டமிடுகிறது. இத்தகைய மின்னிலக்கப் பதிவேடுகள் எல்லைத் தாண்டிய மின்னிலக்க வணிகத்தைத் துரிதப்படுத்துவதோடு அதன் பாதுகாப்பையும் மேம்படுத்தும்.