சிங்கப்பூர்: நெக்ஸ் கடைத்தொகுதியில் மின்-ஸ்கூட்டர் ஓட்டிக்கொண்டிருந்த உணவு விநியோக ஊழியரால் மூன்று வயது சிறுவன் இடித்துத் தள்ளப்பட்டான். அந்தச் சிறுவனின் நெற்றியில் ஸ்கூட்டர் மோதியதை அடுத்து அவன் பின்பக்கமாக விழுந்தான். இந்தச் சம்பவம் மார்ச் 18ஆம் தேதி நடந்தது.
தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட அந்தச் சிறுவனுக்கு நெற்றியில் சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். அவன் அதே நாளில் வீடு திரும்பினான். ஓட்டுநருக்கு எதிராக அவனது 29 வயது தாயார் போலிசாரிடம் புகார் செய்தார்.
முன்யோசனையின்றி அந்தச் சிறுவனுக்குக் காயத்தை விளைவித்ததை 20 வயது நியோ ஜியா மெங் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். இருந்தபோதும், சிறுவன் காயமடைந்ததைக் கண்ட நியோ, தானாக முன்வந்து தன்னைப் பற்றிய விவரங்களை அவனது தாயாரிடம் கொடுத்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
முன்யோசனையின்றி நடக்கும் குற்றங்களுக்காக ஓராண்டு வரையிலான சிறைத்தண்டனையுடன் 5,000 வெள்ளி வரையிலான அபராதம் விதிக்கப்படலாம்.

