40% முன்னாள் கைதிகள் ஐந்தாண்டில் மீண்டும் சிறை

40% முன்னாள் கைதிகள் ஐந்தாண்டில் மீண்டும் சிறை

2 mins read
7b0c30bc-1464-44f9-9c55-26adde51f834
சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் -

2013ஆம் ஆண்டில் சிறை யிலிருந்து விடுவிக்கப்பட்ட கைதிகளில் 40 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் சிறை திரும்பியதாக சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் நேற்று தெரிவித்தார்.

இது கவலைக்குரியது என அவர் அக்கறை தெரிவித்தார். மற்ற நாடுகளைக் காட்டிலும் விடுதலைக்குப் பிறகு மீண்டும் குற்றம் புரியும் விகிதம் சிங்கப்பூரில் குறைவாக இருந்தாலும் மேம் படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

முன்னாள் கைதிகளுக்கான பராமரிப்பு முயற்சி தொடர்பான கருத்தரங்கில் அமைச்சர் சண்முகம் நேற்று கலந்துகொண்டு பேசினார்.

மீண்டும் குற்றம் புரியும் முன்னாள் கைதிகளின் எண்ணிக்கை முன்பைவிட கடந்த ஐந்து ஆண்டுகளில் சிறிதளவு குறைந்திருப்பதாக சிங்கப்பூர் சிறைத்துறை புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

2013ஆம் ஆண்டில் விடு விக்கப்பட்ட கைதிகளில் 41 விழுக்காட்டினர் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் மீண்டும் குற்றம் புரிந்தனர். 2011ஆம், 2012ஆம் ஆண்டுகளில் விடுவிக் கப்பட்ட கைதிகளில் 43 விழுக்காட்டினர் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் குற்றம் புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.

சிறையிலிருந்து விடுவிக்கப்படு பவர்கள் சமுதாயத்தில் மீண்டும் இணைய போதுமான ஆதரவு இன்றி தவிப்பதாக திரு சண்முகம் கூறினார். அதுமட்டுமல்லாமல், குடும்பப் பிரச்சினை வேலை தேடுவதில் சிக்கல் போன்றவற்றை அவர்கள் எதிர்நோக்கக்கூடும் என்றார் அவர்.

கைதிகள் சிறையில் இருக்கும் போது அவர்களுக்கு அளிக்கப் படும் மறுவாழ்வுத் திட்டங்கள் மட்டுமின்றி மேலும் இரண்டு முக்கிய கட்டங்களும் இருப்பதாக திரு சண்முகம் கூறினார்.

குற்றம் புரிவதற்கு முன்பும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகும் முக்கியமான தருணங்கள் என்றார் அவர்.

சிறையிலிருந்து விடுதலையாகி வெளிவருபவர்களுக்கு அரசாங்க, பங்காளித்துவ அமைப்புகள், சமூகத்தின் ஆதரவு ஆகியவை இருந்தால் அவர்கள் மீண்டும் குற்றப் பாதையில் போவதைத் தவிர்க்கலாம் என்று அமைச்சர் கூறினார். முன்னாள் கைதிகளை மீண்டும் சமுதாயத்தில் இணைக்க சமய அமைப்புகள் முக்கிய பங்கு வகிப்பதாக குறிப்பிட்ட திரு சண்முகம், முன்னாள் கைதிகளுக்கான மறுவாழ்வுத் திட்ட பங்காளிகளின் பணியைச் சுட்டி னார்.