தர்மன்: ஐந்து புதிய மின்னிலக்க வங்கி உரிமங்கள் வழங்கப்பட உள்ளன

தர்மன்: ஐந்து புதிய மின்னிலக்க வங்கி உரிமங்கள் வழங்கப்பட உள்ளன

1 mins read

நாட்டின் வங்கித் துறை தொடர்ந்து மீளும்தன்மை, போட்டித் தன்மை, துடிப்புத்தன்மை ஆகியவற்றுடன் இருக்க, நிதிச் சேவைகள் தொடர்பில் மேலும் ஐந்து புதிய மின்னிலக்க வங்கி உரிமங்களை சிங்கப்பூர் நாணய ஆணையம் வழங்கவுள்ளது.

நேற்று முன்தினம் ராஃபிள்ஸ் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற சிங்கப்பூர் வங்கிகள் கழகத்தின் 46வது விருந்துபசரிப்பு நிகழ்ச்சியில் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் இது குறித்து அறிவித்தார்.

சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் தலைவருமான திரு தர்மன், சிங்கப்பூர் வங்கித் துறையில் ஒரு புது அத்தியாயத்தை இம்மின்னிலக்க வங்கி உரிமங்கள் தொடக்கி வைக்கும் என்று குறிப்பிட்டார்.

மின்னிலக்க நிதிச் சேவைகள் கொண்டுவரக்கூடிய வாய்ப்புகளை சிங்கப்பூர் தனக்குச் சாதகமாக்கிக்கொள்ள வேண்டும் என்றும் இதனால் நாட்டின் நிதித் துறையில் புத்தாக்கம் அதிகரிக்கும் என்றும் அவர் சொன்னார். நேரடி யாக ஒரு வங்கிக்குள் செல்லாமல் அனைத்து வங்கிச் சேவைகளையும் இத்தகைய மின்னிலக்க வங்கிகளின் இணைய வசதிகள் மூலமாகவும் கைபேசிச் செயலிகள் மூலமாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் திரு தர்மன் சொன்னார்.