சிங்கப்பூரில் இருப்பவர்கள் புத்தகங்கள், சஞ்சிகைகள், செய்தித்தாட்கள் ஆகியவற்றை அச்சுப்பிரதியிலும் மின்னிலக்கப் பிரதியிலும் அதிகமாகப் படித்து வருவதாக 2018 தேசிய வாசிப்புப் பழக்க ஆய்வு குறிப்பிடுகிறது.
தேசிய நூலகத்தில் மின்னிலக்க இரவலின் எண்ணிக்கை சுமார் மூன்று மில்லியனை எட்டியது. 2017ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 1.5 மில்லியனாக இருந்தது.பெரியவர்களில் 88 விழுக்காட்டினர் வாரத்தில் ஒரு முறைக்கு மேல் படிப்பதாக நேற்று வெளியிடப்பட்ட அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. 2016ஆம் ஆண்டில் அந்த விழுக்காடு 80 ஆக இருந்தது. இதே போக்கு 13 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்டவர்களிடையிலும் தென்படுவதாக அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
ஆய்வில் பங்கேற்றவர்களில் 77 விழுக்காட்டினர் செய்திகளை வாரத்திற்கு ஒரு முறைக்கு மேல் படித்து வருகின்றனர். இந்த விழுக்காடு, 2016ஆம் ஆண்டில் இருந்த 68 விழுக்காட்டைக் காட்டிலும் அதிகம். பதின்ம வயதினரில் 40 விழுக்காட்டினர் வாரத்தில் ஒரு முறைக்கு மேலாகச் செய்திகளைப் படிப்பதாகத் தெரிவித்தனர்.
சிங்கப்பூரர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்கான தேசிய வாசிப்புச் சவாலின் தொடக்கத்தையொட்டி இந்த ஆய்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

