மலேசியாவில் 'ஸ்டார்ஃப்ரெஷ்' நிறுவனத்தின் குடிநீர் போத்தல்களில் மனிதக்கழிவு, சாக்கடைப் பொருட்கள், மண், கிருமிகள் ஆகியவை இருந்ததாகச் சோதனைகள் வழி கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மலேசிய சுகாதார அமைச்சு அந்நிறுவனத்தின் உரிமத்தைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு, தரநிலைப் பிரிவு அதிகாரிகள் அந்நிறுவனத்தின் ஆலையில் சோதனை நடத்தியதில் தரநிலை விதிமுறைகள் சரியாகச் செயல்படுத்தப்படவில்லை என்று அந்த அமைச்சின் தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லாஸ் நேற்று தெரிவித்தார்.
500 மில்லிலீட்டர் மற்றும் 1500 மில்லிலீட்டர் போத்தல்களை மீட்டுக்கொள்வதற்கான உத்தரவு வெளியிடப்பட்டதாக 'த ஸ்டார்' பத்திரிகை தெரிவித்தது.
சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்படும் 'ஸ்டார்ஃப்ரெஷ்' நிறுவனத்தின் குடிநீர் போத்தல்களை மீட்டுக்கொள்வதற்கு சிங்கப்பூர் உணவு அமைப்பு ஜூன் மாதம் 12ஆம் தேதி உத்தரவிட்டது.
'மாலி மினரல் வாட்டர்' என்ற மலேசிய நிறுவனத்தின் நீர் போத்தல்களை சிங்கப்பூர் உணவு அமைப்பு கடந்த வெள்ளிக்கிழமை தடை செய்தது.

