வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடி வீடுகளில் வசிக்கின்ற சுமார் 930,000 குடும்பங்களுக்கு இந்த மாதம் ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு வழங்கப்படும். அந்தக் குடும்பங்களுக்கு ஏற்படக்கூடிய பயனீட்டுச் செலவுகளில் ஒரு பகுதியை இந்தப் பற்றுச்சீட்டுகள் கொண்டு ஈடு செய்யலாம். வீவக குடும்பங்கள் வீடுகளின் வகையைப் பொறுத்து $100 வரை பயனீட்டுத் தள்ளுபடிகளைப் பெறும் என்று நிதி அமைச்சு நேற்று தெரிவித்தது.
ஓரறை மற்றும் ஈரறை வீவக வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு $100 தள்ளுபடி கிடைக்கும். இந்த அளவு மூவறை வீட்டினருக்கு $90 ஆக இருக்கும். நாலறை வீட்டுக் குடும்பங்களுக்கு $80, ஐந்தறை வீடுகளுக்கு $70, எக்ஸிகியூட்டிவ் அல்லது பல தலைமுறை வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு $60 என்ற ரீதியில் தள்ளுபடி கொடுக்கப்படும். ஒன்றுக்கும் அதிக சொத்துள்ள உறுப்பினரைக் கொண்ட குடும்பங்களுக்கு ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு வழங்கப்படாது. குடும்பத்தினர் எந்த நிறுவனத்திடம் இருந்து மின்சாரத்தைப் பெற்றாலும் அவர் களுக்குப் பயனீட்டுக் கட்டணத் தள்ளுபடி கிடைக்கும்.
வாழ்க்கைச் செலவில் ஏற்படக் கூடிய அதிகரிப்பை ஈடுசெய்வதற்காக நிரந்தர ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுத் திட்டம் நடப்பில் இருந்து வருகிறது. அந்தத் திட்டத்தில் மூன்று அம்சங்கள் இருக்கின்றன. மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை அந்தப் பற்றுச்சீட்டு மூலம் குடும் பங்களுக்குப் பயனீட்டுக் கட்டண தள்ளுபடிகள் கிடைக்கின்றன.
சிங்கப்பூரர்களுக்கு மட்டும் உரிய இந்தத் தள்ளுபடிகளைப் பெற தகுதி பெறுபவர்கள், 2019 ஜூலை 5ஆம் தேதிக்குள் அதற்கான தகவலை குறுஞ்செய்தி மூலம் அல்லது கடிதம் மூலம் பெறுவார்கள். குடும்பங்களுக்கு ஏற்படக் கூடிய பயனீட்டுச் செலவில் ஒரு பகுதியை ஈடுசெய்யும் நோக்கத்துடன் கட்டணத் தள்ளுபடிகளை வழங்கி அதன் மூலம் ஒட்டுமொத்த குடும்பச் செலவைக் குறைப்பது இந்த உதவித் திட்டத் தின் நோக்கம்.
இத்திட்டத்தில் தகுதி பெறும் குடும்பங்களுக்கு மொத்தம் $240 முதல் $400 வரை செலவு மிச் மாகும்.
ஓரறை மற்றும் ஈரறை வீவக வீடுகளில் குடியிருக்கும் குடும்பங்கள் இந்தப் பயனீட்டுக் கட்டணத் தள்ளுபடி திட்டத்தின் மூலம் சராசரியாக ஓராண்டில் நான்கு மாதம் வரை பயனீட்டுக் கட்டணம் எதையும் செலுத்தத் தேவையில்லாத நிலை ஏற்படுகிறது. இதேபோல மூவறை, நாலறை வீடுகளில் வாழும் குடும்பத்தினருக்கு ஒன்று முதல் இரண்டு மாதம் வரை பயனீட்டுக் கட்டணங்களைக் கட்டவேண்டி இருக்காது.
இந்தத் தள்ளுபடி காரணமாக அரசாங்கத்திற்கு இந்த ஆண்டு சுமார் $300 மில்லியன் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜிஎஸ்டி பற்றுச்சீட்டு தொடர் பான மேல் விவரங்கள் www.gstvoucher.gov.sg என்ற பக்கத் தில் இருக்கின்றன.

