புதிய விதிமுறைகளுக்கு இணங்க, 85,000 மின்ஸ்கூட்டர்கள் பதிவு

புதிய விதிமுறைகளுக்கு இணங்க, 85,000 மின்ஸ்கூட்டர்கள் பதிவு

1 mins read

மின்ஸ்கூட்டர்களைப் பதிவுசெய்திடும் இறுதி நாளாக ஜூன் 30ஆம் தேதி குறிக்கப்பட்டது. இதன் தொடர்பில் 85,000க்கும் மேற்பட்ட மின்ஸ்கூட்டர்கள் நிலப் போக்குவரத்து ஆணையத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நேற்று முன்தினம் ஆணையம் வெளியிட்ட தகவல் தெரிவித்தது.

இந்த மொத்த எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 1,000 சாதனங்களுக்கான பதிவு இறுதி நாளன்று பதிவாகியதாகவும் கூறப்பட்டது. பதிவுக்காலம் முடிவடைந்துள்ள நிலையில் இனி பொதுப் பாதைகளில் பதிவு செய்யப்படாத தனிநடமாட்டச் சாதனங்களை ஓட்டுவதும் இன்னொருவரைப் பயன்படுத்த விடுவதும் சட்டவிரோதச் செயலாகும்.

பதிவு செய்தோரில் கிட்டத்தட்ட 75 விழுக்காட்டினர் 21 வயதுக்கும் 51 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் 21 விழுக்காட்டினர் 51 வயதும் அதற்கு மேற்பட்டவர்கள் என்றும் ஆணையம் வெளியிட்ட தகவல்கள் கூறின. எஞ்சியோர் 16 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்டோர். பொதுப் பாதைகளில் பதிவு செய்யப்படாத மின்ஸ்கூட்டர்களை ஓட்டுவோருக்கு $2,000 வரை அபராதமும் மூன்று மாதச் சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம். அங்கீகரிக்கப்படாத சாதனங்களை விற்கும் கடைக்காரர்களுக்கு $5,000 வரை அபராதமும் மூன்று மாதச் சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.