தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போக்குவரத்துப் பாதுகாப்புப் படையாக பொதுமக்கள் மாறும் தொண்டூழிய திட்டம்

1 mins read
a9cfb9f5-d74b-4f54-b817-141934ab4a85
கண்காணிப்புத் தொண்டூழியர்களுடன் உள்துறை அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் திரு அம்ரின் அமின் (வலக்கோடி). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பொதுப் போக்குவரத்தில் ஏற்படக்கூடிய சம்பவங்களைப் பொதுமக்கள் கண்காணித்து உதவிக்கரம் நீட்டப் புதிய திட்டம் ஒன்றை போலிசார் அமல்படுத்தியுள்ளனர். 'ரைடர்ஸ்-ஒன்-வாட்ச்' (ரோவ்) என்ற இந்தத் திட்டத்தில் பொதுப் போக்குவரத்தில் இருக்கும்போது யாரேனும் சந்தேகப்படும்படி நடந்துகொண்டாலோ உதவி தேவைப்பட்டாலோ திட்டத்தில் தொண்டூழியர்களாக இருக்கும் பொதுமக்கள் உதவலாம்.

சம்பவங்கள் தொடர்பில் குறுந்தகவல் அல்லது வாட்ஸ்அப்பில் விவரம் தெரிவிக்கப்படும்போது 'ரோவ்' தொண்டூழியர்கள் உடனே செயல்படுவர். மானபங்கம், திருட்டு, மின்படிக்கட்டில் கீழே விழுதல், வழி தெரியாத முதியவர் எனப் பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் இவர்கள் உதவி அளிப்பர்.

உதாரணத்திற்குப் பொதுப் போக்குவரத்தில் குற்றம் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படும் நபரின் அங்க அடையாளங்கள், படங்கள் ஆகியவை தொடர்பில் தொண்டூழியர்களுக்குத் தகவல் அனுப்பப்படும். உடனே இவர்கள் கிடைத்த தகவலைக்கொண்டு சந்தேக நபரை அடையாளம் காணவும் போலிசாரிடம் நடந்ததைப் பற்றி தெரிவிக்கவும் முற்படுவர்.

இந்தத் திட்டத்தி்ல் சேர்ந்த முதல் 15 பேர் இவ்வாண்டு பொதுவுணர்வுடன் செயல்பட்டதற்காக நேற்று உட்லண்ட்ஸ் போலிஸ் பிரிவுக் கட்டடத்தில் விருதுகள் பெற்றனர். இத்துடன் சென்ற ஆண்டும் இதே போன்று செயல்பட்ட மேலும் நால்வருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

உள்துறை அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமின் நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு புதிய திட்டத்தைத் தொடக்கிவைத்தார். அதிகரித்து வரும் ரயில், பேருந்துச் சேவைகளைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் கூடுகிறது. இதனால் அவர்கள் பயங்கரவாதச் சம்பவங்களுக்கும் குற்றச்செயல்களுக்கும் இலக்காகிவிடுகின்றனர். நிலைமையைச் சமாளிக்க போலிசாருக்குப் பொதுமக்கள் கை கொடுக்கவேண்டும் என்றார் திரு அம்ரின்.