அரிய நோய்களால் பாதிக்கப்பட்டோரின் சிகிச்சை கட்டணத்திற்காக உதவப் புதிய நன்கொடை நிதி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சில அரிய நோய்களால் பாதிக்கப்படும் சிங்கப்பூரர்கள் இப்புதிய திட்டம் மூலம் பலனடைவர்.
சுகாதார அமைச்சும் சிங்ஹெல்த் நிதியும் இணைந்து அமைத்துள்ள இந்த 'அரிய நோய் நிதி' சமூகத்திடமிருந்து பெறப்படும் நன்கொடைகளையும் அரசு அதற்கு நிகராகத் தரும் தொகையையும் திரட்டி இந்த நிதியை வழங்கும் என்று நேற்று சுகாதார அமைச்சு அறிக்கை வெளியிட்டது.
பொதுவாக அரிய நோய்கள் நாட்டிலுள்ள சிறுபான்மையினரையே பாதிக்கக்கூடியவை. இவை சிறு வயதிலேயே ஒருவருக்கு இருப்பது உறுதி செய்யப்படுவதுடன் அரிய நோய்கள் பெரும்பாலும் பரம்பரை பரம்பரையாகத் தொற்றி வரும் தன்மையும் பெற்றவை.
அரிய நோய்கள் பலவற்றுக்குத் தகுந்த சிகிச்சைகள் கிடைப்பதில்லை.
இதனால் நோயாளிகளின் ஆயுட்காலம் குறைகிறது. பயன்தரக்கூடிய சிகிச்சைகள் இருந்தாலும் ஓராண்டுக்கான மருந்துகளுக்கே அதிகச் செலவுகள் ஆகின்றன. சில நோயாளிகள் தங்கள் இறுதிக் காலம் வரைகூட மருந்துகளைத் தொடர்ந்து எடுக்கவேண்டிய நிலையிலும் உள்ளனர்.
பொதுச் சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறச் சென்று கட்டணத்தைச் சமாளிக்க முடியாத நிலையில் உள்ள நோயாளிகளுக்குப் புதிய நிதி உதவும்.
சிகிச்சைக் கட்டணத்திற்கு உதவச் சமூகத்தினர் தரும் ஒவ்வொரு வெள்ளிக்கும் நிகராக அரசு மூன்று வெள்ளி தந்து உதவிடும்.
இதுவரை இந்நிதிக்காக 18 மில்லியன் வெள்ளி திரட்டப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்தது.
இத்துடன் அரசின் மும்மடங்கு நிதியையும் சேர்த்துக் கணக்கிட்டால் கிட்டத்தட்ட 70 மில்லியன் வெள்ளியை மொத்த நிதி தொடும் என்று கூறப்பட்டது.
வேறுபட்ட நிபுணத்துவம், அனுபவங்கள், கண்ணோட்டம் கொண்ட தொண்டூழியர்களைக் கொண்டு அமைக்கப்படும் குழு, நோயாளிகள் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்களின் அடிப்படையில் அவர்கள் நிதிக்குத் தகுதிபெறுவதை உறுதிசெய்யும்.

