இங்குள்ள சிறுவர்களில் கிட்டத்தட்ட 54 விழுக்காட்டினர் குறைந்தது ஒருமுறையாவது இணைய அபாயத்திற்கு ஆளாகி உள்ளதாக அனைத்துலக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
'டிகியு' நிறுவனம் நடத்திய இந்த ஆய்வில் 29 நாடுகளைச் சேர்ந்த 38,000 சிறுவர்கள் பங் கேற்றனர்.
ஆய்வில் பங்கேற்ற சிங்கப்பூர் சிறுவர்களில் கிட்டத்தட்ட 85 விழுக்காட்டினர் சமூக ஊடகங்களைப் பயன்டுத்தி வருகின்றனர். இதில் 43 விழுக்காட்டினர் இணையத் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இத்துடன் 16 விழுக்காட்டினர் பாலியல் ரீதியாக இணையத்தில் பாதிக்கப்பட்டதாகவும் 12 விழுக்காட்டினர் முன்பின் அறிமுகமில்லாதவர்களை இணையத்தில் சந்தித்துப் பின்னர் நேரடியாகச் சந்தித்ததாகவும் ஆய்வு கண்டறிந்த தகவல் கவலை தரக்கூடியதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
நாட்டில் 8 முதல் 12 வயதுடைய சிறுவர்களில் பெரும்பாலானோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வருவதாக ஆய்வு கூறுகிறது.
இந்நிலையில் 'ஃபேஸ்புக்', 'டுவிட்டர்', 'இன்ஸ்டகிராம்', 'ஸ்னாப்சேட்' போன்ற சமூக ஊடகத் தளங்களில் உறுப்பினர் ஆவதற்கு குறைந்தது 13 வயதாக இருக்கவேண்டும்.
இதனால் சிறுவர்கள் தங்கள் வயது குறித்துப் பொய்த் தகவல் அளிக்கின்றனர் அல்லது பெற்றோரின் உதவியுடன் சமூக ஊடகத் தளங்களில் உறுப்பினர்களாக இணைகின்றனர் என்றும் நம்பப்படுகிறது.
இணைய அபாயங்களைச் சந்திக்கக்கூடிய சாத்தியம், உலக நாடுகளிலும் கிட்டத்தட்ட சிங்கப்பூர் அளவுக்கு 56 விழுக்காட்டில் காணப்பட்டது. 78 விழுக்காட்டுடன் இப்பட்டியலில் ஓமான் முதல்இடத்தைப் பெற்றது.
பெற்றோர்களும் பராமரிப் பாளர்களும் இணையப் பாதுகாப்பு தொடர்பான பண்புநெறிகளைக் கடைப்பிடிப்பதையும் இணையப் பயன்பாட்டின்போது சிந்தித்துச் செயல்படுவதையும் பிள்ளைகளுக்குக் கற்றுத் தரவேண்டும் என்று இதன் தொடர்பில் நிபுணர்கள் வலியுறுத்திக் கூறி வருகின்றனர்.

