ரெட்ஹில் உணவு நிலையத்தில் ஓர் ஆடவரை மற்றொருவர் தாக்குவதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தாக்கிய ஆடவர் நீல நிறச் சட்டையும் தாக்கப்பட்ட ஆடவர் சிவப்பு நிறச் சட்டையும் அணிந்திருந்ததை 'எஸ்ஜி ரோட் விஜிலாண்டே' ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி காட்டுகிறது. இந்தக் கைகலப்புக்கான காரணம் என்ன என்பது தெளிவாக இல்லை. காணொளியின் பிற்பகுதியில் நீல நிறச் சட்டை அணிந்திருந்த ஆடவருடன் சிலர் நடந்துகொண்டிருந்ததை அந்தக் காணொளி காட்டியது.
காரின் உள்புறக் கேமரா ஒன்று நடந்ததைப் பதிவு செய்திருந்தது அவர்களுக்குத் தெரியும் என்றும் அந்தக் காரை அவர்கள் துரத்த முயன்றதாகவும் காணொளியைப் பதிவேற்றியவர் தமது பதிவில் குறிப்பிட்டார்.தாக்கப்பட்ட ஆடவர் பின்னர் சாலையோரப் புதர்களுக்குள் குனிந்து அமர்ந்திருந்ததை அந்தக் காணொளி காட்டியது.
85 ரெட்ஹில் லேனிலிருந்து உதவிக்கான அழைப்பு காலை 8.36 மணிக்குக் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து 17 வயதுக்கும் 21 வயதுக்கும் இடைப்பட்டுள்ள மூன்று இந்திய ஆடவர்கள் பொது இடத்தில் தொல்லை விளைவித்ததன் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர். போலிஸ் விசாரணை தொடர்கிறது.

