இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பில் அண்டை நாட்டுத் தலைவர்கள் பங்கேற்பு

இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பில் அண்டை நாட்டுத் தலைவர்கள் பங்கேற்பு

2 mins read
faa7f91c-bccf-4fbc-ae59-69fa05ce1d40
(இடமிருந்து) புருணை சுல்தான் ஹசனல் போல்கியா, இந்தோனீசிய அதிபர் ஜோகோ விடோடோ, மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது. படம்: டிபிஏ/பெர்னாமா -

இந்த ஆண்டு தேசிய தின அணிவகுப்பின் சிறப்பு விருந்தினர்களாக அண்டை நாடுகளின் தலைவர்கள் வருகையளிக்கவுள் ளனர். பிரதமர் லீ சியன் லூங்கின் அழைப்பை ஏற்று, சிங்கப்பூரின் இருநூற்றாண்டு நிறைவு தேசிய தின அணிவகுப்பில் மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது, இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ, புரூணை சுல்தான் ஹஸ்ஸனல் போல்கியா ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்று பிரதமர் அலுவலக அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

மூன்றும் மிக நெருங்கிய அண்டை நாடுகளாக இருப்பதுடன் சிங்கப்பூரின் நண்பர்கள் என்றும் சிங்கப்பூரோடு ஆழமான வரலாற்றுத் தொடர்புகளைக் கொண்டவை என்றும் அறிக்கை வலியுறுத்தியது.

இத்துடன் இவ்வாண்டு அணிவகுப்பின் சிறப்பு அம்சமாக ஒளிக்காட்சி இடம்பெறவுள்ளது. முதல்முறையாக பார்வையாளர்களுக்கு எல்இடி விளக்கு பொருத்தப்பட்ட கைப்பட்டைகள் வழங்கப்படவுள்ளன. அணிவகுப்பின் அங்கங்களுக்கு ஏற்ப பார்வையாளர் களின் கைப்பட்டைகளிலுள்ள விளக்குகள் ஒளிரும். பார்வையாளர்களும் அணிவகுப்பின் ஓர் அங்கமாவார்கள்.

இருநூற்றாண்டு நிறைவையொட்டி, நீண்டகாலமாக செயல்பட்டுவரும் எட்டு உள்ளூர் அமைப்புகளின் மிதவைகளின் அணிவகுப்பு தேசிய தின அணிவகுப்பின் மற்றொரு சிறப்பு அங்கம். பள்ளி வாத்தியக்குழுக்களின் அணிவகுப்புடன் தேசிய தினப் பாடல்களின் இசை அங்கமும் இந்த ஆண்டின் அணிவகுப்புக்குச் சிறப்புச் சேர்க்கின்றன.

தேசிய தின அணிவகுப்பின் நிகழ்ச்சி அங்கங்களில் 2,700க்கும் அதிகமானோர் பங்கேற்கின்றனர். இதில் 85 விழுக்காட்டினர் 35 வயதுக்கும் குறைந்தவர்கள். நிகழ்ச்சி அனைத்துத் தலைமுறையினரிடத்திலும் சிங்கப்பூரியத் தன்மையை வரையறுக்கும் பண்புகளான ஒற்றுமை, மீள்திறன், கனவு காண்பதற்கான தைரியம் ஆகியவற்றைக் கொண்டாடுகிறது என்றார் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் கர்னல் லிம் ஹான் யோங்.