நீச்சல் குளத்தில் இருந்த ஆறு சிறுமிகளை மானபங்கம் செய்ததன் தொடர்பில் இந்திய நாட்டவரான ஜோப் மேத்யூ பனகலுக்கு நேற்று 20 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. உள்கட்டமைப்பு பொறியாளராக வேலை செய்த ஜோப், 10 வயதுக்கும் 13 வயதுக்கும் இடைப்பட்ட மூன்று சிறுமிகளை மானபங்கம் செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டார். மற்ற மூன்று சிறுமிகள் சம்பந்தப்பட்ட மேலும் நான்கு குற்றச்சாட்டுகள் தண்டனை விதிப்பின்போது கருத்தில் கொள்ளப்பட்டது.
ஹவ்காங் நீச்சல் குள வளாகத்திற்குச் சென்ற ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி மாலை ஏழு மணியளவில் சென்ற ஜோப், பெரியவர்களுக்கான குளத்தில் நீந்திக்கொண்டிருந்ததார். சில சிறுமிகள் குளத்துக்குள் இறங்குவதைப் பார்த்ததும் அவர்கள் இருந்த முதல் தடத்தை நோக்கி அவர் நீந்தியுள்ளார். முதலில் 13 வயது சிறுமியின் வலது பக்கத்தில் வேகவேகமாக நீந்திச் சென்றதுடன் வேண்டுமென்றே கையை நீட்டி சிறுமியின் வலது தொடையைத் தொட்டதாகக் கூறப்பட்டது.
ஜோப் உரசியதை உணர்ந்த சிறுமி வேகமாக நீந்தியதாகவும் ஜோப் சிறுமியைப் பின்தொடர்ந்துகொண்டே சென்றதாகவும் வழக்கறிஞர் தெரிவித்தார். சற்று நேரம் கழித்து ஜோப் ஒரு பத்து வயது சிறுமியையும் தொடர்ந்து 12 வயது சிறுமியையும் மானபங்கம் செய்ததாகக் கூறப்பட்டது. அச்சிறுமி தன் நீச்சல் பயிற்றுவிப்பாளரிடம் இது குறித்துத் தெரிவித்தார். ஜோப்பின் செயல்குறித்து மறுநாள் ஒரு பெண், போலிசாரிடம் இணையம் வழி புகார் செய்ததையடுத்து ஜோப் கைது செய்யப்பட்டார்.

