மின்னிலக்க உருமாற்றத்தில் ஊழியர்கள் ஈடுபாடு முக்கியம்

மின்னிலக்க உருமாற்றத்தில் ஊழியர்கள் ஈடுபாடு முக்கியம்

2 mins read
2310ba22-6039-4ed5-b5cd-95654f5042d3
வேலை உருமாற்றம் தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் கலந்துகொண்ட வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் (நடுவில்). PHOTO: COURTESY OF MCKINSEY & COMPANY -

மின்னிலக்கமயமாவதை நிறுவனங்கள் சமாளித்து வெற்றிபெற அவை கடைப்பிடிக்கும் கலாசாரத்தில் மாற்றம் முக்கியம் என்று நேற்று வர்த்தகத் தலைவர்களுக்குக் கூறப்பட்டது.

வேலை உருமாற்றம் தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டிற்குக் கிட்டத்தட்ட 300 மூத்த வர்த்தக அதிகாரிகள் வருகை அளித்தனர். மாநாட்டில் நடந்த கலந்துரையாடல் அங்கத்தில் வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் கலந்துகொண்டு பேசினார்.

ஒரே இலக்கை நோக்கி மொத்த ஊழியர் அணியையும் நடைபோட ஊக்குவிப்பதே நிறுவனங்களுக்கு இருக்கக்கூடிய முக்கிய சவால் என்ற கருத்தை அமைச்சர் சான் ஒப்புக்கொண்டார்.

நிறுவனங்களும் அமைப்புகளும் ஊழியர்களிடம் தங்கள் குறிக்கோளைப் பற்றியும் எதிர்காலத் திட்டங்களைப் பற்றியும் கூறுகின்றன.

ஆனால் அத்திட்டங்கள் எவ்வாறு தனிமனிதரைப் பாதிக்கும் என்றும் கூடுதல் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும் என்றும் விளக்கிக் கூறுவதில்லை என்றார் அமைச்சர்.

பொதுச் சேவைத் துறைக்கும் பொறுப்பு வகிக்கும் திரு சான், பலர் இத்துறைக்குள் வேகமாக வருவதும் போவதுமாக உள்ள நிலையைச் சமாளிக்க அரசாங்கம் பல்வேறுவகைப்பட்ட குழுக்களை அமைப்பது முக்கியமாகி வருவதாகக் குறிப்பிட்டார்.

பொதுச் சேவைத் துறையே தற்போது நாட்டின் மிகப் பெரிய வேலை நிறுவனமாக இயங்குகிறது.

குறிக்கோளை நோக்கி ஓர் அமைப்பு செயல்படுவது ஒரு பக்கம் இருக்க, அதன் ஊழியர்களும் புதுமையான திட்டங்களைப் புகுத்த வேண்டுவது அவசியம். அத்துடன் குழு கவனிக்காதவற்றைச் சரிபார்க்கவும் உதவவேண்டும்.

நிறுவனங்களின் உருமாற்றத்திற்கும் புத்தாக்கத்திற்கும் ஏதுவான ஒரு சூழலை அரசு ஏற்படுத்திக் கொடுப்பது குறித்துப் பேசிய திரு சான், அனைத்துலக நாடுகளிலிருந்து திறன்களை இங்குள்ள முறை ஈர்த்து வருவதாகவும் தொடர்ந்து வர்த்தகங்களுடன் அரசு இணைந்து செயல்படும் கலாசாரத்தை ஏற்படுத்திக்கொள்வது முக்கியமாகக் கருதப்படுவதாகவும் அமைச்சர் சான் சுட்டினார்.