தெம்பனிஸ் விரைவுச்சாலையைத் தீவு விரைவுச்சாலையுடன் இணைக்கும் மேம்பாலச்சாலைக்கான கட்டுமானத் திட்டப்பணியின் விரிவான கட்டுமான அமைப்புமுறைத் திட்டங்களையும் வடிவமைப்பு கணக்கீடுகளையும் சரிபார்க்கத் தவறிய பொறியாளருக்கு ஆறு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேம்பாலச்சாலை இடிந்து விழுந்த சம்பவத்தில் 31 வயது சீன ஊழியர் சென் யின் சுவான் உயிரிழந்தார். அத்துடன் 10 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு பொறியாளர் லியோங் சாவ் ஹொனின் குற்றச்செயல் கண்டுபிடிக்கப்பட்டது. 61 வயது லியோங், ஜூன் மாதம் 24ஆம் தேதி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
"கட்டுமானத்தின் நிரந்தர பாரந்தாங்கி கற்பாளங்கள் போதிய அளவில் வடிவமைக்கப்படவில்லை. பத்து கற்பாளங்களில் எட்டு, போக்குவரத்து உட்பட மொத்த பாரத்தைத் தாங்கக்கூடிய அளவுக்கு வலுவாக வடிவமைக்கப்படவில்லை," என்று அரசு தரப்பு வழக்கறிஞர் யாங் ஸிலியாங் மாவட்ட நீதிபதி ஹமிடா இப்ராஹிமிடம் தெரிவித்தார்.
எட்டு கற்பாளங்களில் ஐந்தால் பாரத்தைச் சுமக்க இயலவில்லை. எஞ்சிய மூன்றில் ஆழமான விரிசல்கள் ஏற்பட்டிருக்கும்.
"மேம்பாலம் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்ட பிறகு இந்தச் சம்பவம் நடந்திருந்தால் இதனால் நிகழும் அசம்பாவிதம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருந்திருக்கும்," என்றார் திரு யாங். சம்பவத்தில் இதுவரை லியோங் மட்டும்தான் தனது குற்றத்தை ஒப்புக்கொள்ள இணங்கினார். இருந்தபோதும் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக அவர் மேல் முறையீடு செய்யப்போவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

