தனியார் வங்கியாளர் ஒருவர் போலி கையெழுத்துகளை இட்டு தனது தற்போதைய வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து 10 மில்லியன் டாலரை (13.6 மில்லியன் வெள்ளி) அபகரித்துக்கொண்டார். தனது முன்னாள் வாடிக்கையாளர்களுக்குப் பணத்தைத் திருப்பித் தருவதற்காக அவர் இவ்வாறு செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
எடுக்கப்பட்ட தொகையை ஈடுசெய்யும் வகையில் பார்க்லேஸ் வங்கியாளர் மேலும் வங்கிப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு பணத்தைத் திரும்பப் பெற முயன்றார். ஆனால் அவர் குறைந்தது 10 மில்லியன் டாலரை இழந்தார்.
மொத்தம் 50 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட 43 வயது கலே ஜக்தீஷ் புருஷோத்தமுக்கு 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனையை விதித்தபோது நீதிமன்றம் மேலும் 503 குற்றச்சாட்டுகளைக் கருத்தில் கொண்டது.
2010ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கும் 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கும் இடையே பார்க்லேஸ் வங்கியில் கலே பணியாற்றியபோது அந்தக் குற்றங்களைச் செய்தார்.

