மலாக்கா, சிங்கப்பூர் நீரிணைகள் வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு உடனடி மிரட்டல் நிலவுவது குறித்து எந்தத் தகவலையும் பெறவில்லை என்று கடல்துறை, துறைமுக ஆணையம் தெரிவித்திருக்கிறது. சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட கப்பல்களுக்கு எந்த உடனடி மிரட்டலும் இல்லை என்றும் ஆணையம் கூறியது. மலாக்கா நீரிணையைக் கடந்து செல்லும் தனது கப்பல்களுக்கான பாதுகாப்பு நிலையை சீனா உயர்த்தியதைத் தொடர்ந்து செய்தி ஊடகங்கள் ஆணையத்திடம் மிரட்டல்கள் பற்றி கேட்டன.
"அனைத்துலகக் கப்பல் மற்றும் துறைமுக வசதி பாதுகாப்பு நெறிமுறையின்படி, சிங்கப்பூர் துறைமுகம் தற்போதைய பாதுகாப்பு நிலையான 'நிலை ஒன்றைத்' தொடர்ந்து தக்கவைக்கும். சிங்கப்பூரின் பாதுகாப்பு அமைப்புகள் தொடர்ந்து விழிப்புடன் இருக்கும்," என்றது ஆணையம்.
நீரிணைகள் வழியாகச் செல்லும் அனைத்துக் கப்பல்களையும் விழிப்புடன் இருக்குமாறும் 'ஐஎஸ்பிஎஸ்' பாதுகாப்பு திட்டத்தின்படி பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. அந்த நீரிணைகள் வழியாகச் செல்லும் சீனக் கொடி தாங்கிய கப்பல்கள், தங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கி, பாதுகாப்பு எச்சரிக்கை நிலையை 'மூன்றுக்கு' உயர்த்துமாறு சீனப் போக்குவரத்து அமைச்சு செவ்வாய்க்கிழமை ஆலோசனை விடுத்ததாக 'புளூம்பர்க்' செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இந்தத் திடீர் உயர்த்தலுக்கு எந்தக் காரணமும் கொடுக்கப்படவில்லை. ஜூன் மாதத்தில் அமெரிக்க எண்ணெய்க் கப்பல்கள் ஹோர்முஸுக்கு அருகே தாக்கப்பட்டதை அடுத்து சீனாவின் இந்த எச்சரிக்கை வெளிவந்துள்ளது. இந்தத் தாக்குதலில் ஈரானின் ஈடுபாடு இருப்பதாக அமெரிக்கா நம்புகிறது.
நிலைமை தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணிக்கப்படும் என்றது கடல்துறை, துறைமுக ஆணையம்.

