இவ்வாண்டின் உலகக் கட்டடக் கலை திருவிழா விருதுக்கு ஜுவல் சாங்கி விமான நிலையம் நியமிக்கப்பட்டுள்ளது. கட்டடக் கலை உலகில் புகழ்பெற்ற 'ஆஸ்கர்' விருதுக்கு சமமாக இது கருதப்படுகிறது.
இவ்வாண்டு ஏப்ரலில் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்ட ஜுவல், மற்ற நாடுகளைச் சேர்ந்த எட்டு வேறு கட்டடங்களுடன் போட்டியிடும். ஹாங்காங்கின் வெஸ்ட் கவ்லூன் ஸ்டேஷனும் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பாராங்காரூ ஃபேரி வார்ஃப் வளாகமும் அவற்றில் அடங்கும்.
ஜுவல் சாங்கி வளாகம் தற்போது அமைந்துள்ள இடத்தில் ஏற்கெனவே திறந்தவெளி கார் நிறுத்துமிடம் இருந்தது. அதைக் கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட வசதிகளைக் கொண்ட சுற்றுலாத் தலமாக உருமாற்ற நான்கு ஆண்டுகள் எடுத்தது.
சிங்கப்பூருக்கான ஒரு முக்கிய சின்னமாக ஜுவல் வளாகம் திகழும் என்று அதை வடிவமைத்த முன்னணி கட்டடக் கலை நிபுணர் மோஷி சாஃப்டி முன்னதாக கூறி இருந்தார். மரினா பே சேண்ட்ஸ் வளாகத்தையும் அவர்தான் வடிவமைத்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

