அடுத்த ஆண்டு தொடக்கநிலை ஒன்றாம் வகுப்பில் சேரவிருக்கும் மாணவர்களுக்கான முதற்கட்ட பதிவு முடிந்துள்ள வேளையில், ஏழு தொடக்கப்பள்ளிகளில் தொடக்கநிலை 1 மாணவர்களுக்கான இடங்களில் பாதிக்கும் மேற்பட்டவை அப்பள்ளிகளில் பயிலும் தற்போதைய மாணவர்களின் உடன்பிறப்புகளால் நிரப்பப்பட்டுவிட்டன.
பட்டியலில் பொங்கோல் கிரீன் தொடக்கப்பள்ளி முதலிடம் வகிக்கிறது. அப்பள்ளியில் தொடக்க நிலை 1 மாணவர்களுக்கான இடங்களில் 54.4 விழுக்காடு நிரப்பப்பட்டுவிட்டன. அதாவது, மொத்தம் இருக்கும் 250 இடங்களில் 136 இடங்கள் நிரப்பப் பட்டுள்ளன.
இன்னோவா தொடக்கப்பள்ளி, ஜுன்யுவான் தொடக்கப்பள்ளி, பெய் ஹுவா பிரஸ்பட்டேரியன் தொடக்கப்பள்ளி, ரோசைத் பள்ளி, தெமாசெக் தொடக்கப்பள்ளி, வெஸ்ட் ஸ்பிரிங் தொடக்கப்பள்ளி ஆகியன மற்ற ஆறு பள்ளிகள்.
தொடக்கநிலை 1 மாணவர்களுக்கான கடந்த ஆண்டு பதிவு நடவடிக்கையில் 22 தொடக்கப்பள்ளிகளில் பாதிக்கும் மேற்பட்ட இடங்கள் அப்போது பயின்ற மாணவர்களின் உடன்பிறப்புகளால் நிரப்பப்பட்டன. அந்த எண்ணிக்கையைவிட இது கணிசமாகக் குறை வாகும். கடல்நாக ஆண்டான 2012ல் பிறந்த 40,600 பிள்ளைகள், கடந்த ஆண்டு தொடக்கப்பள்ளியில் சேர்ந்தன. அவர்களுக் காக கூடுதலாக 2,600 இடங்கள் உருவாக்கப்பட்டன.
இவ்வாண்டு தொடக்கநிலை 1க்கு 38,000 பிள்ளைகள் பதிவு செய்வர் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித் தது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட சற்று குறைவு.
அடுத்த ஆண்டு தொடக்கநிலை ஒன்றாம் வகுப்பில் சேர இருக்கும் மாணவர்களுக்கான முதற்கட்ட பதிவு நடவடிக்கையில், தங்களது உடன்பிறப்புகள் பயிலும் அதே பள்ளியில் பிள்ளைகள் விண்ணப்பிக்க முடியும். முதற்கட்ட பதிவு நடவடிக்கைக்கான முடிவுகள் கல்வி அமைச்சின் இணை யப்பக்கத்தில் நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டன.
பிரசித்திபெற்ற மற்ற பள்ளிகளில் தொடக்கநிலை ஒன்றாம் வகுப்பிற்கான இடங்களில் பாதிக்கும் மேற்பட்டவை இன்னும் காலியாக இருப்பதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.
ராஃபிள்ஸ் பெண்கள் தொடக்கப்பள்ளியில் உள்ள 270 இடங் களில் 207 இடங்கள் இன்னும் காலியாக உள்ளன. பிரின்செஸ் எலிசபெத் தொடக்கப்பள்ளியில் உள்ள 200 இடங்களில் 132 இடங்கள் காலியாக உள்ளன. அதே வேளையில், தாவ் நான் பள்ளியில் உள்ள 330 இடங்களில் 201 காலியிடங்கள் உள்ளன.
திருவாட்டி ஓங் ஹுவெய் ஸியின் எட்டு வயது மகன் தாவ் நான் பள்ளியில் பயில்கிறார். அவரது ஆறு வயது மகளையும் அதே பள்ளியில் பதிவு செய்து உள்ளார்.
அப்பள்ளியின் முன்னாள் மாணவியான திருவாட்டி ஓங், "தாவ் நான் பள்ளியின் கலாசாரம் என் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது. அதே தாக்கம் என் பிள்ளைகள் மீதும் ஏற்படுத்தப்பட வேண்டும் என விழைகிறேன்," என்றார்.
தொடக்கநிலை ஒன்றுக்கான 2ஏ(1) பதிவு அடுத்த செவ்வாய்க் கிழமை தொடங்குகிறது. அந்தந்த பள்ளிகளின் முன்னாள் மாணவர் சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ள பெற்றோர், இந்தக் கட்ட பதிவில் பிள்ளைகளைப் பள்ளியில் விண்ணப்பிக்கலாம்.

