ஆய்வு: தகவல் தொழில்நுட்பத் துறை பட்டதாரிகளின் சம்பள எதிர்பார்ப்பு கூடியது

ஆய்வு: தகவல் தொழில்நுட்பத் துறை பட்டதாரிகளின் சம்பள எதிர்பார்ப்பு கூடியது

2 mins read
5a339eae-0c6a-4b4c-8f8b-e14546d1eed3
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம் -

சிங்கப்பூர் மாணவர்களிடையே சம்பள எதிர்பார்ப்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத் துறை பட்டதாரிகள் மாதச் சம்பளமாக $4,500 எதிர்­பார்க்கின்றனர்.

வேலைக்கு ஊழி­யர்களைச் சேர்க்க விரும்பும் நிறு­வனங்களை விளம்பரப்படுத்தும் 'யூனி­வர்சம்' நிறுவனம் நடத்திய வரு­டாந்திர ஆய்வு ஒன்றில் இது தெரிய வந்துள்ளது.

வர்த்தக, பொறியியல் மாணவர்­களைவிட தகவல் தொழில்நுட்ப மாணவர்களிடையே சம்பள எதிர்­பார்ப்பு அதிகமாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. சிங்கப்பூரில் குறைந்த எண்ணிக்­கையிலான தொழில்நுட்பத் திற­ னாளர்கள் இருக்கும் நிலையில், அவர்களுக்கான தேவை அதிக­ரித்திருப்பதையொட்டி அவர்களின் சம்பள எதிர்பார்ப்பும் கூடி உள்ளதை ஆய்வறிக்கை சுட்டியது.

தகவல் தொழில்நுட்ப பட்ட­தா­ ரிகள் ஆண்டு சம்பளம் என சரா­சரியாக $53,721 எதிர்பார்க்­­ ­கின்றனர். அப்படியென்றால், மாத சம்பளமாக அவர்கள் $4,500 எதிர்பார்க்கின்றனர். வர்த்தக, பொறியியல் துறை மாணவர்கள் எதிர்­பார்க்கும் சம்பளத்தைவிட இது சுமார் 20 விழுக்காடு அதிகம்.

வர்த்தகத் துறை மாணவர்கள் ஆண்டு சம்பளமாக $44,459 எதிர்பார்க்கின்றனர். பொறியியல், அறிவியல் துறை மாணவர்கள் $44,661 எதிர்பார்ப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.

அத்துடன், வர்த்தகத் துறை மாணவர்களில் 44 விழுக்காட்டினர் வங்கித் துறையை அவர்கள் பணி­புரிய விரும்பும் துறையாக தெரிவு செய்துள்ளனர். தரவரிசைப் பட்டி­யலில் பெரும்பாலான வங்கிகள் குறிப்பிடத்தக்க அளவில் முன்­னேற்றம் அடைந்துள்ளன.

அவற்றில் 'கோல்ட்மென் சாக்ஸ்', 'கிரெடிட் சுவிஸ்', 'டிபிஎஸ்', 'ஜேபிமோர்கன்' உள்­ளிட்ட வங்கிகள் அடங்கும்.

பட்டம் பெற்ற உடன் முதல் வேலையாக அனைத்துலக நிறு­வனம் ஒன்றில் பணிபுரிய மாண­ வர்கள் விரும்புவதே வங்கித் துறை பிரபலமடைவதற்கு பல கார­ணங்களில் ஒன்றாக கருதப்படு­ கிறது.

"அனைத்துலக நிறுவனம் ஒன்றில் வாழ்க்கைத் தொழிலைத் தொடங்க 50 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட மாணவர்கள் விரும்புவது குறிப்பிடத்தக்க ஒன்று," என்று யூனிவர்சம் நிறுவனம் கூறியது.

இதற்கிடையே, தரவரிசையில் பொதுத்துறை ஒட்டுமொத்தமாக சரிவைச் சந்தித்து வருகிறது. பொதுத்துறை நிறுவனங்கள் பற்றி போதிய அளவிற்குத் தெரியாததும் வேலையில் சேர்க்கப்படுவதற்கு கடுமையான போட்டி நிலவுவதும் அத்துறையைத் தாங்கள் தேர்வு செய்யாததற்கு இரு பிரதான கார­ணங்கள் என வர்த்தகத் துறை மாணவர்கள் கூறினர்.

எதிர்கால முதலாளிகளைப் பற்றி ஆய்வு செய்வதற்கு எத்த­கைய தளங்களை மாண­வர்கள் பயன்படுத்துகின்றனர் என்பது பற்றி அவர்களிடம் ஆய்வில் கேட்கப்பட்டது. சமூக ஊடகம் வாயிலாக முதலாளிகள் குறித்த தகவல்களைப் பெற்றுக்­கொள்­வதாக வர்த்தக, தகவல் தொழில்­நுட்பத் துறை மாண­வர்கள் குறிப்பிட்டனர்.

மாறாக, வேலைவாய்ப்புக் கண்­காட்சியின் மூலம் முதலாளிகளைப் பற்றித் தெரிந்துகொள்வதாக பொறியியல், அறிவியல் துறை மாணவர்கள் கூறினர்.

தாங்கள் படித்து முடித்தவுடன் எந்த நிறுவனத்தில் பணிபுரிய விரும்புகின்றனர் என்பது குறித்து சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களில் பயிலும் 10,000க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் கேட்கப்பட்டது. அனைத்து துறை மாணவர்களின் தேர்வின்படி, பணிபுரிவதற்குச் சிறந்த நிறுவனப் பட்டியலில் இம்முறையும் கூகல் நிறுவனம் முதலிடம் வகிக்கிறது.