மலாக்கா, சிங்கப்பூர் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து தனக்கு எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை என்று கடல்துறை, துறைமுக ஆணையம் நேற்று தெரிவித்தது.
ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த ஆணையம், சிங்கப்பூரில் பதிவான கப்பல்களுக்கு உடனடி மிரட்டல் எதுவும் கிடையாது என்பதைத் தெளிவு படுத்தியது.
மலாக்கா நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கான பாதுகாப்பு நிலையை சீனா உயர்த்திய ஒருசில தினங்கள் கழித்து ஆணையத்தின் இந்தக் கருத்து வெளிவந்துள்ளது. முக்கிய ஆசிய வர்த்தகப் பாதையாக மலாக்கா நீரிணை உள்ளது.
"அனைத்துலகக் கப்பல் மற்றும் துறைமுக வசதி பாதுகாப்பு நெறிமுறையின்படி (ஐஎஸ்பிஎஸ்), தற்போதைய பாதுகாப்பு அளவை சிங்கப்பூர் துறைமுகம் கட்டிக்காக்கும். சிங்கப்பூரின் பாதுகாப்பு அமைப்புகள் தொடர்ந்து விழிப்புநிலையில் இருக்கும்," என்று ஆணையம் விவரித்தது.
நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களையும் விழிப்புடன் இருக்குமாறும் 'ஐஎஸ்பிஎஸ்' பாதுகாப்புத் திட்டத்தின்படி பாது காப்பு நடவடிக்கைகளை எடுக்கு மாறும் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
அந்த நீரிணை வழியாகச் செல்லும் சீனக் கொடி தாங்கிய கப்பல்கள், தங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்து, பாதுகாப்பு எச்சரிக்கை நிலையை 'மூன்றுக்கு' உயர்த்துமாறு சீனப் போக்குவரத்து அமைச்சு கடந்த செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியதாக புளூம்பர்க் செய்தி நிறு வனம் தெரிவித்தது.
சீனா அதன் பாதுகாப்பு நிலையை உயர்த்தியதற்கான எந்தக் காரணமும் கொடுக்கப்படவில்லை. ஹோர்முஸ் நீரிணையில் கடந்த மாதம் அமெரிக்க எண்ணெய்க் கப்பல்கள் தாக்கப்பட்டதை அடுத்து சீனாவின் இந்த எச்சரிக்கை வெளிவந்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம் என்று அமெரிக்கா சாடி யது.
இந்நிலையில், நிலைமை தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணிக்கப்படும் என்று கூறிய கடல்துறை, துறைமுக ஆணையம், மலாக்கா, சிங்கப்பூர் நீரிணை வழியாகச் செல்லும் சிங்கப்பூர் கப்பல்கள் உட்பட அனைத்து கப்பல்களுக்கும் நிலைமைக்கேற்ப உரிய அறிவிப்புகள் வழங்கப்படும் என்று சொன்னது.

