தோ பாயோ லோரோங் 8ல் அமைந்துள்ள புளோக் 223க்கு அருகே நேற்று ஏற்பட்ட விபத்து ஒன்றில் கார் ஒன்று மோசமாக சேதமடைந்தது.
இந்த விபத்து குறித்த நேற்று பிற்பகல் 3.08 மணிக்கு தனக்கு தகவல் கிடைத்ததாக போலிஸ் தெரிவித்தது. விபத்தில் காயம் அடைந்த 53 வயது மாது ஒருவர் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப் பட்டதாக போலிஸ் கூறியது.
நீல நிற கார் ஒன்று தலைகீழாக கவிழ்ந்து கிடப்பதைச் சம்பவ இடத்தைப் படமாகிய புகைப்படங்கள் காட்டின. அதே வேளையில், வெள்ளை நிற கார் ஒன்றின் முன் பகுதி மோசமாக சேதமடைந்து காணப்பட்டது. மின்கம்பம் ஒன்று அந்த காரின் விளக்கில் மோதிய நிலையில் இருந்தது.
அந்த வாகனங்களைச் சுற்றி கான்கிரிட் இடிபாடுகள் கிடந் தன.
இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட வாகனங்களில் இரு கார்கள் நின்ற நிலையில் இருந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் அறிகிறது. சாலை தடுப்பை மோதிய பிறகு அந்த நீல நிற கார் தலைகீழாக கவிழ்ந்ததாகத் தெரிகிறது.
கவிழ்ந்து கிடந்த காரின் ஓட்டு நருக்கு உதவ வழிபோக்கர்கள் 10 பேர் விரைந்ததாக சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் ஷின் மின் சீன நாளிதழிடம் கூறினார். அந்தப் பெண் ஓட்டுநர் காரில் சிக்கிக்கொண்டார். சுத்தியலைக் கொண்டு காரின் கண்ணாடியை உடைத்து அவரை வெளியே இழுத்தனர்.

