அவசரகாலத்தில் உதவும் உயிர்காப்பு திறன்கள்

அவசரகாலத்தில் உதவும் உயிர்காப்பு திறன்கள்

3 mins read
1508fa52-f87c-4fef-8ee2-47463ef9244f
மாதிரி வடிவம் ஒன்றில் உயிர்காப்பு பயிற்சியை மேற்கொள்ளும் திரு சர்வானந்தனின் மகன் திரு ராஜ்ராகவன். அருகில் இருப்பவர் அவரது தந்தை சர்வானந்தன் (இடது).  படம்: சர்வானந்தன் -

ப. பாலசுப்பிரமணியம்

இந்த ஆண்டு நியூசிலாந்து, இலங்கை போன்ற நாடுகளில் நடந்த தாக்குதல் சம்பவங்கள், உலகின் எந்த மூலையிலும் இனி­மேலும் நடக்கலாம் என்பதை நமக்கு உணர்த்தியுள்ளன.

எதிர்பாராதவிதமாக அசம்பா வித சம்பவம் ஒன்று நிகழும் போது, நிதானத்தைக் கடைப் பிடித்து அதனைச் சமாளிப்பதற்கு அடித்தளத் தொண்டூழியர்கள் வகிக்கும் பங்கு முக்கியமானது. அதற்காகத் தகுந்த பயிற்சிகளை அவர்கள் பெற்றும் வருகின்றனர்.

யூஹுவா சமூக மன்ற C2E எனும் சமூக அவசரநிலை, ஈடு பாட்டுக் குழுவின் தலைவராக 2013ஆம் ஆண்டு முதல் பொறுப்பு வகித்து வருகிறார் தொண்டூழியர் திரு சர்வானந்தன் ராஜநாயகம்.

இக்குழு அமைதி காலத்தில் சமூக அவசரகால ஆயத்தநிலைத் திட்டங்களையும் செயல்முறை களையும் வரைந்து அதனைச் செயல்படுத்தும்.

அவசரகாலத்தின்போது தயார் நிலையில் இருக்க, மாதிரி பயிற்சி களையும் நடவடிக்கைகளையும் குழு மேற்கொள்கிறது. மற்ற பங்காளிகளுடன் இணைந்து அது சமூக அவசரகால ஆயத்த நிலை விழிப்புணர்வு குறித்தும் பொது மக்களுடன் பகிர்ந்துகொள்கிறது.

அப்படி தாக்குதல்கள் நடந் தால், சமூக வளங்களையும் அடித் தள அவசரகால மீட்பு முயற்சி களையும் ஒருங்கிணைக்க அக் குழு உதவும்.

"ஒவ்வொரு வீட்டிலும் ஒரு வராவது அவசர காலத்தில் என்ன செய்யவேண்டும் என்பதில் பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண் டுள்ளோம்.

"அதன்படி, குடியிருப்பாளர் களுக்கு இதய இயக்க மீட்பு சிகிச்சைமுறை (CPR), தானியங்கி வெளிப்புற இதய இயக்கு கருவியை (AED) பயன்படுத்தும் முறை ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்து வருகிறோம்," என்றார் திரு சர்வானந்தன், 54.

பயங்கரவாத தாக்குதல்களில் சிலர் ரத்தக்கசிவால் உயிரிழக்க வாய்ப்புண்டு என்று குறிப்பிட்ட திரு சர்வானந்தன், முதலுதவி புரியும் உத்திகளைக் கற்றுக் கொண்டால் ஒருவரின் உயிரைக் காப்பாற்றலாம் என்று வலியுறுத் தினார்.

அடுக்குமாடி கட்டடக் கீழ்த் தளத்தில் நடக்கும் விருந்து நிகழ்ச்சிகள், இதர சமூக மன்ற நிகழ்ச்சிகள் போன்றவற்றில் குடியிருப்பாளர்களிடம் இது குறித்து அக்குழுவினர் விழிப் புணர்வை ஏற்படுத்துகின்றனர்.

இதில் அக்கறை காட்டும் குடியிருப்பாளர்கள் சமூக மன்றங் களில் இலவசமாக நடத்தப்படும் இந்த உயிர் காப்புப் பயிற்சிகளில் ஈடுபட்டு, CERT எனும் சமூக அவசரநிலை மீட்புக் குழுவில் தொண்டூழியராகச் சேர்கின்றனர்.

பொது இடங்களில் ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால், இந்த மீட்புக் குழுவினர் காயத்திற்கு கட்டுப் போடுவது, பாதுகாப்பான இடத்திற்கு பொதுமக்களைக் கொண்டு செல்வது, கூட்டத்தை கட்டுப்படுத்துவது போன்ற பணி களில் ஈடுபடுவர்.

"உயர்நிலைப் பள்ளி மாணவப் பருவத்திலேயே சொந்த ஆர்வத் தின் காரணமாக இந்த இலவச உயிர்காப்புப் பயிற்சிகளுக்குச் சென்று சமூக அவசரநிலை மீட்புக் குழுவில் இடம்பெற்றேன்.

"எனது மூத்த அண்ணனும் இதில் பயிற்சி பெற்றவர். இந்த உயிர்காப்பு உத்திகளை உயர் நிலைப் பள்ளிகள் முதல் அறிமுகம் செய்வது சமூகத்திற்குப் பயன் தரும்," என்று தெரிவித்தார் யூஹுவா வட்டாரத்தின் சமூக அவசரநிலை மீட்புக் குழுவில் இடம்பெறும் திரு சர்வானந்தனின் மகன் திரு ராஜ்ராகவன், 21.

அண்மையில் தமது வட்டாரத் திலுள்ள ஒரு குடியிருப்பாளர் உணவு உண்ணும்போது உணவு தொண்டையில் சிக்கிக்கொண் டதில் தமது குழுவைச் சேர்ந்த தொண்டூழியர் இந்த உத்திகளைப் பயன்படுத்தி அவரைக் காப்பாற்றிய சம்பவத்தை நினைவுகூர்ந்தார் திரு சர்வானந்தன். "அமைதி காலத்திலும் ஏன் சொந்த குடும்ப உறுப்பினரையும் காப்பாற்ற இந்த உத்திகள் கைகொடுக்கும்," என்று அவர் விளக்கினார்.